Sunday, December 13, 2015

கலைஞருக்கு !

படைப்பாற்றலின் உச்சம் சிற்பம். அதன் நீச நிலை கட்டுரை. இடைப்பட்டவையே வண்ண ஓவியங்கள்,கோட்டோவியங்கள்,கவிதைகள்.
கவிதையில் ஆரம்பித்து கட்டுரைக்கு இறங்கி வந்திருக்கும் ஆசுகவி நான்.இந்த கட்டுரை கவிதை போல் காட்சியளித்தால் அது பழைய "வாசனையே"

என் சகல செயல்பாடுகளின்  மூலம் என் சிந்தனை. என் சிந்தனைகளின் மூலம் பிறப்பறுத்தல்.

மானிடராய் பிறத்தலரிது என்ற அவ்வையின் வரிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. சக மனிதர்களின் சமாதி வாழ்க்கை என்னைஅவளுடன் முரண்பட செய்துவிட்டது.

சில யுக புருடர்களின் -அதிமனிதர்களின் சாதனைகளே என்னை தற்கொலையில் இருந்து தப்புவித்தது.

நான் கானமயிலாட கண்டிருந்த வான் கோழி அல்ல. கீழ் வான் மிசை ஒளிர்ந்த சூரியர்களின் ஒளியை உறிஞ்சிய சந்திரன்.

என் சூரியர்கள் அனைவருமே மரண ராகுவால் விழுங்கப்பட்டுவிட்டனர். சமகாலர்களின் சரித்திர சொரணையற்ற போக்கால் அவர்களின் நினைவும் சமுதாய நீரோட்டத்தில் இருந்து நீங்கி வருகின்றன.

எனக்கு ஒளி தந்த சூரியர்களில் மேலைக்கடல் மிசை கடைசி கிரணங்களை வீசிக்கொண்டிருக்கும் கலைஞரே உமக்காகத்தான் இந்த கட்டுரை.
உமக்காக என்பதை விட கடல் கடந்தும் பரவி வாழும் தமிழர்களுக்காக என்பதே சரியாக இருக்கும்.உமக்கான மடல் எனில் தபாலில் சேர்த்திருக்கலாமே.

எந்த நதியும் புனிதமாகத்தான் புறப்படுகிறது .இடைப்பட்ட பயணத்தில் தானே அத்தனை அழுக்குகளும் சேர்ந்து கொள்கின்றன.

நதியையேனும் ஒரு பெருமழை-வெள்ளம் சுத்திகரித்து விடுகிறது. 93 வருடங்களாய் பயணித்து வரும் இந்த நதி ..

கடலில் விழும் முன்னேனும் தன்னை புனிதப்படுத்தி கொண்டே ஆகவேண்டும்.கடலுக்காக அல்ல தாகத்தால் தவிக்கும் உயிர்களுக்காக

இந்த  நதியின் கரைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியதும் இதன் நலிவுக்கு ஒரு காரணம். நதிதான் தன் கரைகளை தீர்மானிக்க வேண்டுமே தவிர நதிக்கரை மனிதர்கள் அல்ல.

பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம்.மேட்டை கரைத்தும்,பள்ளத்தை நிரப்பியும் ஓடவல்லது நதி.

இந்த நதி தன் பாதையில் தானே உருவாக்கிய மேடுகளே அதிகம்.மேடுகள் இதை சில காலம் நிறுத்தியிருக்கலாம்.

அந்த கால கட்டத்தில்  இது பக்கவாட்டில் பரவியது.இலக்கிய சோலைகள் ,கலை பூங்காங்கள் செழித்தன.

பரவியதே தவிர வற்றிவிடவில்லை. திசையை மாற்றிக்கொண்டு விடவில்லை.

சில மேடுகளை காலம் கரைத்தது - சிலவற்றை இதுவே கரைத்தது.
மேடுகளை கரைத்ததில் நதியின் நிறம் சற்றே மாறியது .

ஆனாலும் என்ன ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
கடல் கண்ணுக்கு தெரிய நதிக்கு உத்வேகம் பிறக்குமாம்.

அது போல் கலைஞரே !
குறுக்கப்பட்ட கரைகளை விஸ்தரித்து
சோர்வுற்ற மனதை சொஸ்தப்படுத்திக்கொண்டு
பாய்ந்தே ஆகவேண்டும்.

வாழும் போது இந்த வையகம் எந்த சாதனையாளனைத்தான் தலையில் தாங்கியது?
அவன் விழும் போது மடியில் தாங்கியது !
உலகம் பேசட்டும் ..
அதற்கு உம் கடந்த காலம் மட்டுமே தெரியும்.
எதிரிகள் ஏசட்டும்.
அவர்களுக்கும் அதுவும் முழுமையாக தெரியாது.

கழுகின் உயரம் தெரிந்தும் பிணந்தின்னி என்று பே(ஏ)சுவது ஒரு மன நோய்.
உம் வேலை அந்த மன நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை.

நீர் விழும் போது உமை தாங்கி
நீர் எழும்போது விலகி நின்று வியக்கும் வ்யக்திகளுக்கு என்ன செய்யப்போகிறீர்?

உம் சரித்திர தப்பிதங்களுக்கும் சாணக்கிய கற்பிதங்கள் செய்து உமை தூக்கி பிடிக்கும் தொண்டனுக்கு என்ன செய்யப்போகிறீர்?

பல கல்ப்பங்களுக்கு பேசப்பட வேண்டிய உம் வாழ்வு உமது அல்ப்ப ஆசைகளால்
ஏச்சுக்கும் பேச்சுக்குமே ஆளாகிவிட்டதை இப்போதேனும் உணர்கிறீரா?

தோல்விகளில் இருந்து பாடம் கற்கலாம்
எதிரிகளிடம் இருந்து அல்ல.
எதிரிகளிடம் கற்ற "இலவச" பாடங்களை இப்போதே எரித்து போடுங்கள்.
இலவசங்கள் உம்மை எம்.ஜி.ஆர் ஆக்கப்போவதில்லை.
ஆனால் உம்மிலான கலைஞரை மட்டும் காயடித்துவிட்டன.

சரித்திரத்தில் ஒரு எம்.ஜி.ஆர் தான் ஒரு கலைஞர் தான்.
எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான்
கலைஞர் கலைஞர் தான்.
கலைஞர் எம்.ஜி.ஆராக முடியாது.ஆனால் கலைஞர் கலைஞராக  மீண்டு வர முடியும்.

மக்கள் மாறி விட்டார்கள் .
ஈழத்தில் இனம் அழிந்தால் என்ன தாம் வாழ்ந்தால் போதும் என்பவர்களாகி விட்டார்கள். ஈழத்துக்காக இருமுறை ஆட்சி இழந்த உமக்கு - மீட்க முடியாது போன உமக்கு, நாற்பதும் வென்ற உமக்கு  நான் சொல்ல தேவையில்லை .

நீரிட்ட முட்டைகள் வாக்கு குஞ்சுகளை பொரித்திருந்தால் அது வேறு கதை. நீர் தந்த தொலைக்காட்சி பெட்டிகள் வாக்கு ஒளிபரப்பை செய்திருந்தால் அது வேறு கதை .பிறகு ஏனிந்த வதை?

இன்றைய மக்களுக்கு தேவை தமிழோ -தமிழின் பெருமையோ -எதுகை மோனைகளோ -பழம் பெருமையோ -குறியீடுகளோ -மானில உரிமைகளோ, மானில சுயாட்சியோ -சுயமரியாதையோ  அல்ல.

சின்ன கூட்டுக்குள் அடைந்து கொள்ள - கொஞ்சம் பொருள் -அந்த பொருள் தேட ஒரு தொழில். ஈட்டிய பொருள் டாஸ்மாக்கிலோ -முகமூடி கொள்ளையர்களாலோ பறி போய்விடாத நிலை. இதற்கு தேவை நிர்வாகம். சீரிய நிர்வாகம்.

வெந்ததை தின்று விதி வந்தால் சாக இந்த மக்கள் தயார்.
நிர்வாகம் என்ற ஒன்றே  நிர்மூலமாகிப்போன இந்த நிலையில் மக்களுக்கு தேவை ஒரு கலைஞர் -கலைஞர் மட்டுமே..

இந்த ஆட்சியில் பால் விலை ஏறியது ,பஸ் கட்டணம் உயர்ந்தது ,மின் கட்டணம் ஏற்றப்பட்டது .கூடவே கடனும் இருமடங்கானது .
சமீபத்திய உமது ஆட்சியில் இந்த விலையேற்றம் -கட்டண உயர்வு நடந்திருந்தால் தமிழகத்தின் முன்னேற்றம் பத்தாண்டுகளுக்கு முன்னோக்கி தவ்வியிருக்கும்.

நீங்களோ எம்.ஜி.ஆர் ஆகிவிடவேண்டும் என்ற கனவில் எதையும் ஏற்றவில்லை .ஆனாலும் மக்கள் உம்மை போற்றவில்லை.

 நீர் நீராக இருக்கவேண்டும் -வேறாக வேண்டாம்.

வேர்களை மறந்த மரம் உயர்வதில்லை.
பழுத்த இலைகளை உதிர்க்காத மரம் துளிர்ப்பதில்லை.
விதைகளை உதிர்க்காத மரம் பரவுவதில்லை.

வான பிரஸ்த வயதில் போருக்கு தயாராக சொல்லவில்லை.
போருக்கு தயாராக இருக்கும் தளபதிக்கு வீரத்திலகமிட சொல்கிறேன்.

உமது வாழ்க்கை காவியம் தான். இல்லை என்பதற்கில்லை.
ஆனால் அதன் திருத்திய பதிப்பே இன்றைய காலத்தின் கட்டாயம்.

 நீர் பிழை திருத்தத்துக்கு  தயாராகி விட்டால் இனி உமக்கோ -தமிழகத்துக்கோ வருத்தத்துக்கு வழியே இல்லை.
செய்வீரா?