சீனியர் சிட்டிசன்ஸ்

அன்பு !                 கருணை !!         மனித நேயம் !!!

சமூகத்திற்கும், மனித குல மேம்பாட்டிற்கும் தேவையானதும்,  இன்று   நாளுக்கு நாள் கரைந்து வருவதும் அன்பு ,கருணை , மனித நேயம் என்ற இந்த 3 அம்சங்களே. முக்கியமாக சீனியர் சிட்டிசன் எனப்படும் முதியவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

தினம் தினம் புதிது புதிதாக  முதியோர் இல்லங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. தோன்றியவை அனைத்தும் நிரம்பி வழிந்துகொண்டே இருக்கின்றன. பெற்ற பெண்,பிள்ளைகளே தம் பெற்றோரை அனாதைகள் என்று சொல்லி இவற்றில் சேர்க்கும் இழி நிலை உள்ளது.

 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த மனிதகுலம் இன்று மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால்  தேவைகளை சகட்டுமேனிக்கு  பெருக்கிகொண்டு வரவுக்கும் செலவுக்கும் இடையில் விழும் துண்டை அடைக்கவே இயற்கையிலிருந்தும், மனித நேயத்திலிருந்தும் விலகி  ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கிறது.

உபயோகித்தவுடனே தூர எறிந்துவிடும் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரத்தை கொண்டவர்களின் மொழியான  ஆங்கிலமே ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று கூறுகிறது. ரயில்வே ஸ்டேஷன் வாசலிலிருந்து ரயில் பெட்டிவரை நம் லக்கேஜை சுமந்து வரும் போர்ட்டருக்கே அம்பதும் நூறும் அள்ளி விட்டு தேங்க்யூ சொல்லும் நாம் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை மறக்கலாமோ?  மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த தந்தையை மறக்கலாமோ?

தமிழ் வருடங்கள் 60. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் கழிந்தால் மீண்டும் முதல் ஆண்டே வருகிறது. 60 வயது நிறையும்போது  வாழ்வின் ஒரு முழுமையான வட்டம் முடிகிறது. மீண்டும் அவர்கள் புதிதாய் பிறக்கிறார்கள். குழந்தைகளாய் இருந்த நம்மை வளர்த்து பெரியவர்களாக்க தம் இளமை,சக்தியையெல்லாம் இழந்த அவர்கள் குழந்தைகளைப்போல் பல்லிழந்து, சொந்தமாய் நடக்கமுடியாது, தவழும் நிலைக்கு வரும்போது நம் நன்றியுணர்வை காட்டி அந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பல்லவா?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு

என்பது வள்ளுவன் வாக்கு. வயது முதிர்ந்த நம் தாய் தந்தையர்க்கு மட்டுமன்றி வயது முதிர்ந்தோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவோம். அன்பு செலுத்துவோம். குறைந்த பட்சம் கருணை காட்டுவோம்.மனித நேயத்தை காப்போம். நாம் மனிதர்கள் தான் என்பதை நினைவுப்படுத்திக்கொள்வோம்.  காலம் என்ற ஆசிரியனிடம் தம் வாழ்வை,இளமயை  இழந்து அவர்கள் பெற்ற அனுபச்செல்வத்தை பகிர்ந்து கொள்வோம்.

குறைந்த பட்சம் நம் குழந்தைகள் நமது முதுமையில் நம்மை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக அறிந்து கொள்ளவேனும் தாய் தந்தையரை காப்போம். முதியோரை காப்போம்.


கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. ஆனால் குஞ்சுகள் மிதித்தால் கோழிகள் முடமாகும். அது  ஏழேழு தலைமுறைக்கும் நம்மை வாட்டும் பெரும்பாவத்துக்கு இடமாகும்.

No comments:

Post a Comment