Tuesday, June 22, 2010

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

தாயே !
நீ யாது செய்தாலும் அது  என் லட்சியப்பயணத்தை முடித்துவைக்கவே என்பதை நான் அறிவேன்.குறைந்த பட்சம் என் வாழ்க்கை பயணத்தையாவது முடித்து வைக்கத்தான் உன் நயன அசைவில் கோள்களை இயக்குகிறாய்.மரணத்துக்கு நான் அஞ்சுவதாயில்லை. மேலும் வரவேற்கவே செய்கிறேன்.

எப்படியும் மரியாதைக்குரிய வாழ்வை நான் வாழவில்லை. சமூக பார்வையில் மட்டுமல்ல. என் பார்வையிலும் தான்.

எனவேதான் என்  மரணமேனும் மரியாதைக்குரியதாய் அமைய வேண்டுமென்று துடிக்கிறேன்.

மகா வெடிப்பு காரணமாக உருவாகி அந்த வெப்பத்தால் ஒரு புறம் விரிவடைந்தபடி மறுபுறம் சுருங்கியபடி இருக்கும் இந்த விஸ்வத்தில் , இந்த படைப்பின் ஆரம்பத்தில் ஒரு மின்னல் பாய்ந்ததில் முதல் உயிர் தோன்றியதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மின்னல் உன் மூக்குத்தியிலிருந்து பிறந்து வந்ததாய்  நான் கற்பித்துக்கொள்வதில் விஞ்ஞானிகளுக்கோ ,விஞ்ஞானத்துக்கோ என்ன வலி.? எங்கே வலி?

உன் வலி(மை)  நானறிவேன். என் நலி(வு) நீயறிவாய். உன் அருட்கரம் என் பின்னிருந்து ஆசி கூற நான்  நீ அமரும் புலி.  உன் கரம் ஓய்ந்தால் உளமெங்கும் கிலி. சத்துவம் கற்பித்தாய். தத்துவம் உணர்த்திவிட்டாய். இனி என்ன? வாழவேண்டும். நான் வெறுமனே பிழைத்திருந்த காலத்திலேயே,அறம் பிழைத்திருந்த காலத்திலேயே வெற்று பிழைப்புக்கு எதிரி நான். வாழ்விக்க வேண்டும். பூவுலகை. வாய்ப்பிருந்தால் வானுலகை.

மல மூத்ர தாரியான இவ்வுடலில் கமலம் மலரவும் , என் விழி நீர் உலரவும் உனை விட்டால் வேறு வழியில்லை. நாளிதுவரை நான் சுமக்காத பழியில்லை. எனைகண்டு மூடாத விழியில்லை.

அம்மா என்றுனை சரண் புகுந்தேன். முரண்களை விட்டு நகர்ந்தேன். அரண்களை தாண்டி தாயே உனை நாடி வந்தேன். பல்லவி பாடி வந்தேன்.

என் வாக்கில் அமர்ந்தாய். என்னை என் போக்கில் விட்டாய். சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா..

நான் வெறுமனே காசு பணம் கிட்டும் என்று மந்திரம் கேட்டேன். நீ அவன் மனம் நின்று யாவும் பெற்றிட விதைச்சொல் தந்தாய். உன்னருளாலே உன் அருள் நாடி உன் அருளாலே மந்திர பெற்றும் செபித்தேன்.

ஓம்:

பிரணவ ஜெபம் செய்வித்து இறந்திருந்த எனக்குள் பிராணனை பிரதிஷ்டை செய்தாய். 

ஐம்:
ஞானப்பெட்டகத்தை காட்டுவித்து ,பூட்டெல்லாம் திறப்பித்து கொள்ளையிட உத்தரவு தந்தாய். என்னில் சச்சரவெல்லாம் சமாதியாக மயான அமைதிக்கே அச்சாரம் கொடுத்தாய். அதில் ஆதிசிவனை ஆட வைத்தாய். என்னை பாட வைத்தாய்.

ஹ்ரீம்:
உலகமெனும் நாடகமேடையை ஒரு மாயத்திரை மூடியிருக்க நிஜத்தை அதன் நிர்வாணத்தை தரிசிக்க முடியாது தவித்திருந்தேன். அம்மாயத்திரையை விலக்கியதோடு   என் மேல் மாயத்திரை ஒன்றை இறக்கி வைத்தாய். உலகத்தை  என் வியூகம் அறியாது விலகி நிற்க  வைத்தாய். கூட்டுப்புழுவென கிடந்த என்னை  ஒரு கூட்டில் சிறைவைத்து வண்ணத்து பூச்சியாய் வளரச்செய்தாய்.

க்லீம்:
நிதம் நிதம் உருமாறி, என் உள்ளத்தை சரமாரியால் தவிக்கச்செய்த நட்பும்,உறவும் என்னைக்கண்டு அஞ்சிடச்செய்தாய்.

ஸ்ரீம்:
சேராதிருப்பது கல்வியும் செல்வமும் என்ற சொலவடைக்கு சோர்வு வர என் மேல் காசும்  காதல் கொள்வித்தாய்.

நீ அம்மை. நானுன் கை பொம்மை. ஆட்டுவித்தல் நின் செயல். நல் வழி (கா)கூட்டுவித்தல் நின் கருணை.

ஓம் சக்தி

No comments:

Post a Comment