"தத் ..என்ன நீ ? எதுக்கெடுத்தாலும் கண்ணீரா?"
"அது... அது..கண்கள் எழுதற கவிதை கண்ணா.."
"யப்பா ..புல்லரிக்குது கவிதையா? சரி உன் சாமான் செட்டையெல்லாம் பர்மனென்டா பேக் பண்ணிரு. அப்பா உனக்காகவே மிக்சி,கிரைண்டர்,லொட்டு,லொசுக்குன்னு வாங்கி குவிச்சிருக்காரு. வேணம்னா டிவி, ஹேர் ட்ரையர் மாதிரி சமாச்சாரங்களை அங்கயும் யூஸ் பண்ணிக்கலாம்."
"இது உத்தரவா..வேண்டு கோளா"
" நிலவரம் தாயி.. டெசிஷன் ஈஸ் யுவர்ஸ்"
ஆட்களை வச்சு மாயா ரூம்ல இருந்த சாமான் செட்.ஃபேன், ட்யூப்லைட்டையெல்லாம் பேக் பண்ணி எங்க வீட்ல கொண்டு சேர்க்கறதுக்குள்ள சுருக்குன்னு வெயில் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. பள பளன்னு ஆயில் பெயிண்ட் என்ன .. வால் பேப்பர் என்ன.. சின்னதா சாமி அலமாரி என்ன.. மாயா சின்னபொண்ணு மாதிரி கை கொட்டி சிரிச்சா.. "
" எல்லாம் ஓகே தான். ஆனால் நான் தான் உன் ரூம்ல நுழைய முடியாது"
"ஏன்?"
" இதென்ன நேரு ஸ்ட்ரீட்ல இருக்கிற உன் ரூமுன்னு நினைச்சயா.. ரிங்க் மாஸ்டர் மாதிரி எங்கப்பா. .கழுகு மாதிரி எங்க பாட்டி. கெட் டு கெதர் ப்ரோக்ராமெல்லாத்தயும் மறந்துர வேண்டியதுதான்."
"அய்யய்யோ என்னடா சொல்றே உங்கப்பா ரொம்ப லிபரல் அது இதுன்னு சொன்னே.."
"சொன்னேன் தான் அதுக்குனு பட்டவர்த்தனமா கண்ட நேரத்துல உன் ரூமுக்குள்ள நான் நுழைய முடியுமா என்ன?"
"சரி மாடில இருக்கிற உன் ரூமுக்கு நானே வந்துர்ரன்"
"இது பெட்டரா தோணுது..ஆனா திருட்டுத்தனமாதான் வரவேண்டியிருக்கும். முதல்ல நான் வெளிய போறாப்ல பாவ்லா காட்டனும். அப்புறம் திருட்டுத்தனமா மாடிக்கு போகனும்.. தலைவலிடா சாமி"
"சாரி முகேஷ் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை.. நீயாவது முன் கூட்டி சொல்லியிருக்கலாம்"
"சரி ஓஞ்சு போவட்டும்.. இப்போ என் வீட்ல இருக்கிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தறேன்.உன் மூளைல ஒரு ஓரமா போட்டுவச்சிக்கிட்டா இங்க லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்கும்"
"சரி சொல்லு"
"முதல்ல எங்கப்பா .."ன்னு ஆரம்பிச்சேன்.கும்முன்னு மூக்குப்பொடி வாசனை .." என்னடா என்னை பத்தி ஏதோ ஓடுது.. இல்லாததையும் பொல்லாததயும் சொல்லி அந்த பொண்ணை பயமுறுத்திராத.
"தபாரும்மா மாயா.. எனக்கு இன்னைக்கு 60 வயசு.. இன்னைக்கும் தினசரி ஷேவ் பண்ணிக்கிறேன். குளிக்கிறேன்.ஒரு மணி நேரம் பூஜை பண்ணறேன் பேண்ட் ஷர்ட் தான் போடறேன். மார்க்கெட் போறேன். டிவில ந்யூஸ் ஃபாலோ பண்றேன். பேப்பர் படிக்கிறேன். லைப்ரரி போறேன். மதியம் தூங்கறேன். சாயந்திரம் வாக் போறேன். நாலு ஃப்ரெண்ட்ஸை பார்க்கிறேன். ராத்திரில ரொம்ப நேரம் படிப்பேன். என்னோட மைனஸ் பாயிண்ட் என்னடான்னா எதிராளி இன்டரஸ்ட்டடா இல்லையானு கவனிக்காம உயர்ந்த விஷயங்களை பேசிக்கிட்டே போவேன்..யாராவது கிளறிவிட்டா பாஸ்டுக்கு போயிருவன் அவ்ளதாம்மா.. நான் தண்ணி போடமாட்டேன். போடறவனை குறைச்சுக்கனுவன் , நான் பெருமைக்கு பன்னி மேய்க்கமாட்டேன். மேய்க்கிறவனை வேணான்டா கெட்டுப்போயிருவன்னு உஷார் பண்ணுவேன்..மத்தபடி என்னால யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. நான் எப்படி இருக்கேனோ அதே மாதிரி பிறரும் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா"
அப்பா பேசி முடிச்சிட்டு ஃபினிஷிங்க் டச் கொடுக்கிற உத்தேசத்துல "ஜாஸ்தி பேசிட்டேன் போல உனக்கு போரடிச்சா போரடிக்குது அங்கிள்னு சொல்லிடலாம் உனக்கு அந்த ரைட் இருக்கு ஓகேவா .. இந்த போடுகால ரொம்ப நம்பாதே இவன் காலேஜ்ல படிக்கிறப்ப நான் ஹோட்டலுக்கு போனா முதலல் பாக்கெட்லபணமிருக்கான்னு பார்த்துக்கிட்டுதான் உள்ளாற போவேன்"ன்னு சொல்லி நிறுத்தினார்.
சஸ்பென்ஸ் தாங்காம மாயா "ஏன் அங்கிள்?"னு கேட்டாள். அதுக்கு அப்பா தன் முகத்தை பரிதாபமா வச்சுக்கிட்டு , "இந்த கம்னாட்டிதான் என் பாக்கெட்டை எப்பவோ காலி பண்ணிட்டிருப்பானே "ன்னாரு மாயாவுக்கு ஒரே சிரிப்பு..
"இப்ப எப்படி அங்கிள்?இப்பவும் காலி பண்ணிர்ராரா?"
"இவன் வானம் மாதிரிம்மா ..பேஞ்சா பேஞ்சு கெடுப்பான் ..காஞ்சா காஞ்சு கெடுப்பான்.. இவன் பணம் கொடுத்தா நான் வாங்கறதில்லேனு திருட்டு தனமா என் பாக்கெட்ல ஐ நூறும் ஆயிரமும் வச்சிருவான். ஒரு நாள் அப்படித்தான் ஒரு குடிகார ஃப்ரெண்ட் தண்ணி போட கடன் கேட்டான்.. நான் டேய் என் கிட்டே பொடி வாங்க ஒரு பத்து ரூபாதாண்டா இருக்குனு எடுத்து காட்டறேன்..பார்த்தா கூடவே ஒரு ஐ நூறு ரூபா நேட்டு வருது.. தலையெழுத்தேன்னு சில்லறை மாத்தி அவனுக்கு பத்து ரூபா கொடுத்துட்டு வந்தேன் இவன் கொடுத்து தான் எனக்கு நிறையனும்னு ஒன்னுமில்லம்மா ஏதோ நான் படிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. கிடைச்ச சம்பளம் எனக்கு போதுமானதா இருந்தது. மத்தவங்க மாதிரி நான் கிம்பளத்துக்கு கை நீட்டல.. எனக்கு அமைஞ்ச மனைவியும் சிக்கனமா குடும்பம் நடத்தினா சுத்தமான கையோட வெளிய வந்தேன்.. என்னடான்னா எப்ப மனைவி தேவையோ அப்ப மனைவி இல்லாம போயிட்டா.சரி அவ விதி முடிஞ்சு போச்சு போய் சேர்ந்துட்டா ..பாழாப்போன கடவுள் அட்லீஸ்ட் ஒருபெண் குழந்தைய கொடுத்திருந்தா அதை பார்த்து மனச ஆத்தியிருப்பேன்.. சரி போகுது போ அதான் நீ வந்திருக்கயே " இப்படி பேசிக்கிட்டே இருந்தவரு ..இரும்மா ஒரு நிமிஷம் வந்துர்ரன்னிட்டு உள்ளார போனவரு கை நிறைய நெஞ்சு வரைக்கு பட்டுப்புடவைகளை கொண்டு வந்தவரு "இதெல்லாம் என் வைஃப் கட்டின புடவைங்க. இது மாதிரி இன்னும் நாலு வரிசை இருக்கு.. நாலு மருமகளுக்கு 4 போட்டம். இது உனக்கு ஏதோ வெள்ளிக்கிழமை, அமாவாசை ,கிருத்திகை,பண்டிகை நாள்ள கட்டி கிழி"ன்னாரு..
மாயா " அங்கிள்.. இதெல்லாம் எதுக்கு அங்கிள்.. நீங்க ஏதோ உங்க மனைவி ஞாபகமா வச்சிருக்கிங்க..இதையெல்லாம் எனக்கு கொடுத்துட்டா எப்படி ?"ன்னு பதறினாள்.
அப்பா, " யம்மாடி நீ ஏன் இப்படி பதர்ரே..என் மனைவி செத்து 3 வருஷமாச்சா அவளை பத்தின ஞாபகமெல்லாம் மெல்ல மங்கிக்கிட்டு வருதும்மா.. எதுனா அசவுகரியம் ஏற்பட்டாதான் அவ ஞாபகமே வருது அட்லீஸ்ட் இந்த புடவைய நீ கட்டி நடக்கறப்பயாச்சும் மங்கி போன நினைவுகள் லேசா தீட்டப்படட்டுமேங்கற சுய நலத்துலதான் கொடுக்கிறேன்..வாங்கிக்கம்மா"ன்னிட்டு உள்ள போனார்.
" நான் கொஞ்ச நேரத்துல பாட்டிய ரைட் பண்ணி கூட்டிக்கிட்டு வருவாரு பாரு. பாட்டிக்கு நீ இங்கே குடிவர்ரதுல விருப்பமில்லே. வீட்டு நிர்வாகத்தையெல்லாம் கிழவிதான் பார்க்குது. பயங்கர ஊழல் . செலவை அதிகரிச்சு காட்டி பணம் ஒதுக்கி எங்க அத்தைக்கு ஏறப்போடும். நீ வந்துட்டா மோனோப்பலியா இருக்க முடியாதேன்னு கிழவிக்கு காண்டு."
நான் சொன்னமாதிரியே அப்பா பாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தார். " நான் சொன்னேனே மாயான்னு இவுங்கதான்... என் ஃப்ரெண்ட் டூர் பஸ் ஓனர் பரமசிவம் இருக்கானே அவன் கம்பெனிலதானே நம்ம முகேஷும் வேலை பார்க்கிறான். இவுங்களும் பரமசிவம் ட்ராவல் ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. பாவம் நீ தனியா இருக்கிறப்ப எவனாச்சும் வந்து மண்டைல போட்டு காது,கழுத்துல இருக்கிறத உருவிக்கிட்டு போயிட்டா இன்னா பண்றது அதுக்குதான் இவங்களை நம்ம வீட்லயே வச்சுர்ரதுன்னு ஏற்பாடு பண்ணேன்" பாட்டி முகத்தில் உங்க தில்லாலங்கடி பேச்செல்லாம் எனக்கு தெரியாதாங்கற ஃபீலிங்க் ..அப்பா மாயா பக்கம் திரும்பி அப்பா சரியில்லாம எங்கம்மா தான் இட்லி சுட்டு என்னை ஆளாக்கினாங்கன்னு பல தடவ சொல்லியிருக்கேனே.. இவிங்கதான் என் அம்மா பேரு லட்சுமி"ன்னாரு.
பாட்டி ஏற இறங்க மாயாவ பார்த்து " ஏண்டியம்மா நீ பாட்டுக்கு குளிச்சு முழுகி வேலைக்கு போயிரப்போற..நீ எனக்கு காவலா? நல்லாதான் உடறாங்க பாரு பீலா .. நீ ஒன்னும் எனக்கு காவலா இருக்க தேவையில்லே.. என் காவல் உனக்கு தேவையில்லேனு சொல்லிராதே.. யாரும் கை நீட்டி சொல்லிராதமாதிரி ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும் புரியுதா.. சாப்பாடு எப்படி நீயே ஆக்கிக்குவயா .. இல்லே ஓட்டலா?" பாட்டி பேச பேச அப்பா கைய பிசைய ஆரம்பிச்சுட்டாரு. மாயா மூஞ்சி சிறுத்து போச்சு..
நான்" ஏ கெய்வீ... அவிங்க ஒன்னும் சோத்துக்கில்லாம வரலை.. ஆக்கத்தெரியாதவுகளுமில்லே.. விட்டா உனக்கும் சேர்த்து ஆக்கி போட்ருவாங்க..அப்புறம் உனக்கு தான் இம்சை.. உன் செல்ல பொண்ணுக்கு ஒன்னத்தயும் ஏறப்போட முடியாது"ன்னு சீறினேன்.
பாட்டிக்கு ரேங்கிக்கிச்சு.." பொண்ணா பொறப்பெடுத்து "ன்னு ஒப்பாரி ஆரம்பிக்க நான் முறைச்சு பார்த்தேன். அப்பாவ பார்த்து "டேய் ..சுந்தரேசா.. உங்கப்பன் கூட தான் மாரடிச்சேன்னா இப்ப இவன் கூடவும் மாரடிக்க வேண்டியதாயிருக்கே..அந்த படுபாவிதான் உன் வயித்துல இப்படி பொறந்தானா என்னா தெரியலயேடா..அவன் முறைக்கிறத பார்ரா உங்கப்பன் கூட இப்படி முறைச்சதில்ல.. எக்கேடும் கெட்டுப்போங்க ..அப்பனும் புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கனும்னு முடிவு பண்ணியிருக்கிங்க ..இதெல்லாம் எங்கதான் போய் முடியப்போவுதோ பார்க்கத்தானே போறேன்னு " பேசிக்கிட்டே உள்ள போயிருச்சு.
அப்பா , "மாயா நீ தப்பா எடுத்துக்காதே.. வயசாக வயசாக தங்களோட முக்கியத்துவம் போயிருமோனு பயம் வந்துரும். அதனால சின்ன மாற்றத்தை கூட கடுமையா எதிர்க்கிற சைல்டிஷ் பிஹேவியர் வந்துரும்.. எங்கம்மா பாவம் ரொம்ப நல்லவங்க பேச்சுத்தான் இப்படி .. கொஞ்ச நாள் போவட்டும் நீயே பாட்டி பாட்டினு உயிரை விடுவே.."ன்னிட்டு லைப்ரரிக்கு கிளம்பி போனார்.
பாட்டி எதையோ முனகிக்கிட்டே சமையலறை பக்கமா போனா.மாயா மலங்க மலங்க முழிச்சிக்கிட்டிருந்தா ..நான்,"மாயா ! என்ன டர்ராயிட்டயா.. நீ இதையெல்லாம் கண்டுக்காதே..கிழவி ஓவரா போனா எனக்கு சொல்லு.. செம ஃபிட்டிங்க் இருக்கு நம்ம கிட்டே"ன்னேன்.
மாயா, " நான் யோசிச்சது அதில்லை முகேஷ்.. உங்கப்பாவுக்கே 60 வயசுன்னா உன் பாட்டிக்கு எண்பதாவது இருக்கும்னு நினைக்கிறேன். பாரேன் புருஷன் சரியில்லை. பையனை வளர்த்து ஆளாக்கி, ஆஃபீசராக்கி , இந்த வயசுலயும் சமைச்சு வீட்டை நிர்வாகம் பண்றாங்கன்னா ரியலி க்ரேட்மா.."ன்னா.
"உக்கும் உனக்கு தெரிஞ்சது அவ்ளதான் சுஜாதாவோட அப்பாவின் ஆஸ்டின் கதைல வர்ர மாதிரி எங்க அத்தைக்கு மாப்பிள்ளை பார்க்கிறப்ப எங்கப்பா கொஞ்சம் அசால்டா இருந்த பாவத்துக்கு கிழவி இத்தனை ஆட்டம் போடுது.. அப்பாவும் கண்டுக்காம இருக்காரு"
"என்னாச்சு சரியா விசாரிக்காம தங்கச்சிய கட்டி கொடுத்துட்டாரா.. உங்க மாமா குடி கிடின்னு போறவரோ"
"ச்சீ ச்சீ நாக்கு அழுகிரும். ரொம்ப நல்ல மனுஷன். என்னடான்னா எங்கப்பா மாதிரி அவரும் அவிங்க அப்பா அம்மாவுக்கு சரண்டர்.அவங்க் குடும்பம் எலுமிச்சை மொத்த வியாபாரம் பண்ணுதுன்னு புரோக்கர் சொன்னானாம். அப்புறம் பார்த்தா கூடையில வச்சு சில்லறை வியாபாரம் பண்றவுங்கன்னு தெரிஞ்சதாம்"
"குடும்பம் இருக்கட்டும் ..உங்க மாமா?"
"அவர் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்ல க்ளர்க் ஸ்திரமான வேலை தான். கை நிறைய சம்பளம்"
"பின்னே என்ன கேடு ?"
"இத நீ போய் எங்கப்பனையும், அத்தையையும் கேட்கனும்.. இந்த ஒரு பாயிண்டை பிடிச்சுக்கிட்டு எங்கப்பனுக்கு கில்ட்டி வரவச்சு இந்த வீட்ல பாதிய களவாடி பொண்ணுக்கு குடுத்தாச்சு. மீதிய களவாட நீ எங்க தடையாயிருவயோன்னு பயம் கிழவிக்கு"
"ஏன் இப்படி விடறது. பேசாம உங்கத்தை குடும்பம் ஃபைனான்ஸியலா வித் ஸ்டாண்ட் ஆகற மாதிரி எதுனா ஸ்திரமா பண்ணிரலாமில்லயா?"
" நீ பச்ச புள்ளயா.. இல்லே நடிக்கிறயான்னே தெரியலை. அதெல்லாம் பண்ணாத இருப்பானா எங்கப்பன் தர்ம ராஜாவாச்சே. ஆரணி சூரிய குளத்துல ஃபேமிலி ப்ராப்பர்ட்டி கோர்ட்ல இருந்தது. அந்த கேஸுக்கு மாசாமாசம் பட்ஜெட் ஒதுக்கி செலவழிச்சு இவர் பங்கு வந்ததும் அதை என்னா ஏதுன்னு கூட பார்க்காம தங்கச்சிக்கு தாரை வார்த்துட்டாரு.."
"இன்னும் என்னவாம் ?"
"அதென்ன பீடையோ எனக்கு தெரியாது. ஆசைக்கு அளவு ஏது ? எங்கத்தை பொண்ணு என்னைவிட ஆறுமாசம் சின்னது. எங்க பெரிய அண்ணனுக்கும் எனக்கும் பத்து வயசு வித்யாசம். அவன் எம்.ஏ. இவள் எட்டாம் கிளாஸ். இவனுக்கு அவளை கட்டி வைக்கனுமாம் .. அப்படி ஒரு ப்ரப்போசல்"
"அடடே இத்தனை பாலிடிக்ஸ் இருக்கா?"
"கலைஞர் சொல்வாரே கழகமே குடும்பம்னு இங்கே எங்க குடும்பமே ஒரு கழகம் மாதிரி.. எங்க பெரியண்ணன் இருக்கானே .. அவன் சரியான பட்டி விக்கிரமாதித்தன்"
"அப்படின்னா?"
"மனப்பாடம் பண்றதை பட்டியடிக்கிறதும்போமில்லயா அப்படி பட்டியடிச்சே எம்.ஏ வரை வந்துட்டதால அவனுக்கு அப்படி ஒரு பேரு.. பயங்கரமான கணக்கு புள்ளை சுய நலமி. பயந்தாங்கொள்ளி எங்க வீட்ல எங்க ரெண்டு அண்ணனும் ஒரு ஜோடி. நானும் என் தம்பியும் ஒரு ஜோடி. முதல்ல ரெண்டோட நிறுத்திட்டு 10 வருசத்துக்கப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும்னு எங்கப்பா விளையாடிட்டாரு போல அதான் நானும் என் தம்பியும் இவ்ளோ லேட்டு.சின்னப்ப நானும் என் தம்பியும் விளையாடிட்டிருக்கும்போது பக்கத்து தெருவுல போயி குமுதல் இரவல் வாங்கிட்டு வரசொல்வான். விளையாட்டு மும்முரத்துல முடியாது கிடியாதுன்னா போச் உடனே ஏய் இந்த நேரத்துல என்னடா விளையாட்டு உள்ள வந்து படிங்கடான்னிருவான். குமுதம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டா நாங்க எங்கே போனாலும் அவனுக்கு டோன்ட் கேர்."
"முகேஷ் கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.. வெறுமனே பேசிக்கிட்டு இருக்கிறத விட கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்னா திங்க்ஸ் எல்லாம் பிரிச்சு அடுக்கிரலாம். அடுக்கிக்கிட்டே பேசலாம் ஓகேவா"ன்னாள் கொஞ்சலா..
"ம்..உனக்கு நடக்குது வாடகையில்லாம வீடு.. ஜாமான் செட்டை கொண்டு வந்து சேர்க்க சிகப்பா ஒல்லியா ஒரு பையன், அடுக்கி வைக்கவும் அவனே.. சரி ஹெல்ப் பண்றேன் எனக்கென்ன லாபம் ?"
" ஒரு சிகரட்..?"
" சிகரட்டா.. சரி.. ஆனா நீயே கொளுத்தி விடனும் ஓகேவா"
" நாசமா போ எனக்கென்ன ? ஓகே.."
மதியம் வரை பேச்சும் , அடுக்கலுமாய் கழிந்தது. பாட்டி ரெண்டு அலுமினிய தட்டில் களியுருண்டையும், கீரையும் கொண்டு வந்து " அடுக்கினது போதும்னா சாப்பிடறதானா சாப்பிடலாம்"னிட்டு போயிட்டா. நான் மாயாவை பாத்து கண்ணடிச்சேன். உடனே மாயா கேட்ச் பண்ணிக்கிட்டு " ஹய்யா களியா ? எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு களி பிடிக்கும்னு உனக்கெப்படி தெரியும் பாட்டி?" என்று குதூகலித்தாள்.
"அதெல்லாம் எனக்கு தெரியாதுடியம்மா கேழ்வரகு, கம்பு,சோளம் இதெல்லாம் சாப்டா ஒடம்புக்கு ஒரு ரோகமும் வராது. இல்லேன்னா வாராவாரம் டாக்டருக்கு மொழியெழுத வேண்டியதுதான். சரி சரி சாப்டுட்டு தட்டை கழுவி வச்சுர்ரியம்மா.. காஞ்சு போனா கழுவ முடியாது" என்றுவிட்டு போனாள் பாட்டி.
"ஏய் என்னை பார்த்து எதுக்கு கண்ணடிச்ச "
"உன்னை நான் கவுக்க இல்லேம்மா மாயாம்பிகே ! ..கிழவிய நீ கவுக்க க்ளூ கொடுத்தேன் ஸ்விட்ஜர்லாந்து பசு மாதிரி இருந்தாலும் பாஸ்பரசு மாதிரி புடிச்சிக்கிட்டியே பாயிண்டை"
"ஏய் நான் பார்த்தா பசு.. பாஞ்சா "
"கழுதையா?"
'ரெண்டு கைல ரெண்டு தட்டுல களியும் கீரை குழம்புமா நின்னுக்கிட்டிருந்த என் இடுப்புல ஒரு கிள்ளு கிள்ளினாப்பாருங்க.. வர்ம கலை எதுனா கத்து வச்சிருக்காளோன்னு தோணிட்டது.. கத்தினா கிழவி என்ட்ரி கொடுத்துரும்.. கத்தலைன்னா கிள்ளு தொடரும்.. ரத்தம் கட்டுமோ சொட்டுமோ சொல்ல முடியாத நிலை.. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்..வலிய சமாளிக்க புது மாதிர்யா காமா சோமானு டான்ஸ் ஆடிக்கிட்டே மாயா கன்னத்துல பச்சக்குனு ஒரு இச் குடுத்து "பாப்பா! ஒரு ஆண்,ஒரு பெண் ஸ்தூலமா எதை செய்தாலும் அவங்க சூட்சுமத்துல செய்யறது பலான சமாச்சாரம்தான்"னேன். வாழ்க்கையே வெறுத்துப்போய் சடக்குனு இடுப்புல இருந்த கைய தூர எடுத்துட்டா..
"உண்மையிலயே எனக்கு களி ரொம்ப பிடிக்கும். அதுவும் களிக்கு கீரை குழம்பு ச்சூப்பர் காம்பினேஷன். நீ ஒன்னும் க்ளூவும் கொடுக்கவேணாம் நான் யாரையும் கவுக்கவும் வேணாம்.. முதல்ல சாப்பிடு. இன்னம் பாதி வேலை கூட முடியலை. வாய் தான் ஆடுதே தவிர கையாட மாட்டேங்குது."ன்னு கடுப்படிச்சுட்டு வாஷ் பேசின்ல கை கழுவி, முந்தானைல துடைச்சிக்கிட்டா. நான் கை கழுவிட்டு பேண்ட் சைடு பாக்கெட்ல கைய விட்டேன்.." தத் இதென்ன வழக்கம்னு என் கைய பிடுங்கி தன் முந்தானைல துடைச்சி விட்டா ..சாப்பிட வந்த நான் ஆவேசமா களிய கிள்ளினேன் யப்பாடி.. கையே வெந்து போச்சோன்னு சந்தேகம் வந்துருச்சு. "சனியனே உன்னால கிழவி என்னையும் சேர்த்து பழி வாங்குது.."ன்னேன்.
மாயா சிரிச்சிக்கிட்டே " பட்டணத்து முட்டாள்னு நிரூபிச்சிட்டே. கீரை குழம்பு கூலா இருக்கும்,களி உள்ளார ரொம்பவே சூடா இருக்கும். முதல்ல அஞ்சு விரலையும் குவிச்சு குழம்புல நனைச்சிக்கிட்டு அப்புறம் களி ஜோலிக்கு போகனும் இல்லாட்டி இப்படித்தான் தெனாலி ராமன் பூனை மாதிரி தவிக்கனும்"னு சொல்லிக்கிட்டே கைய குழம்புல நனைச்சு களியை கிள்ளி உருட்டி குழம்புல நனைச்சி "ம் வாய திற"ன்னா மாயா.
களிங்கறது கைதிகளுக்கு கொடுக்கிற தண்டனைன்னு எனக்குள்ள ஒரு ஃபீலிங்க் உண்டு. ஆனா மாயாவோட கை அதை கிள்ளி உருட்டி குழம்ப்ல நனைச்சு அதை என் முகத்துக்கு நேரா நீட்டினப்ப இலவச இணைப்பா இந்த உபசாரம் கிடைக்கறாப்ல இருந்தா தினசரி மூனு வேளை களியேன்னாலும் கவலையில்லேன்னு தோனுச்சு. பேசாம விழுங்கினேன். மாயா தானும் சாப்பிட்டுக்கிட்டு , எனக்கும் கொடுத்துக்கிட்டு இருந்தப்ப.. பாட்டி.வந்துட்டா."பார்த்தயா பார்த்தயா இந்த அநியாயத்தை"ன்னு ஆரம்பிச்சா
எனக்கே முதுகுத்தண்டுல ஜிலீர்னுச்சு.. என்னடா இது கிழவி ஏற்கெனவே மாயாவ கிளப்ப சாக்குதேடிக்கிட்டிருக்கிற சமயத்துல இப்படி ஆயிருச்சேனு ஃபீல் ஆயிட்டன். அதுக்குள்ள கிழவி "ஏண்டா பொச கெட்டவனே என்னவோ இங்கிலீஷ் துரை மாதிரி களியா ப்ளடி இண்டியன் ஃபுட் அது இதுன்னு பம்மாத்து பண்ணுவே இதே ஒரு பொட்டச்சி உருட்டி ஊட்டினா எதை வேணம்னா தின்னுவியா..கொத்தவரங்கா மாதிரி யிருந்துக்கிட்டு என்னா ஆட்டம் காட்டனே எனக்கு இப்ப எவளோ வந்து உருட்டி ஊட்டினா முதலையாட்டம் வாய திறக்கறே..ஆமா உன்னைவிட 10 வயசு பெரியவளாமே இவ.. என்ன இழவோ கலி முத்திப்போச்சு.. எப்படியும் உனக்கு கிட்ணன் (கிருஷ்ணன்) புத்தி .. அவரு கூட தன்னைவிட மூத்தவளான ராதாவ இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டாராம். ராதா மாதிரி வந்திருக்கா.. இவளையாவது கல்யாணம் கட்டிக்கோ.. நல்லபடி வாழ்ந்தா சரி.. என்ன .. ஒரு பிரச்சினைன்னா உனக்கு முன்ன ரெண்டு பேரு இருக்காணுவ.." அது இதுன்னு பேசிக்கிட்டே போனா. மாயா, " பாட்டி நீங்களா எதை எதையோ கற்பனை பண்ணிக்காதிங்க.. முகேஷ் நான் சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிச்சான் ஒரு தடவை கூட சாப்பிட்டு பார்க்காம சாப்டமாட்டேன்னா எப்படின்னு .." என்று கன்வின்சிங்க் டோனில் பேச பாட்டி, " உலகம் பொறந்து இத்தனை காலத்துக்கு இதுவரை இந்த விஷயத்துல எவளாச்சும் ஆமா அப்படித்தான்னு பேசியிருக்காளா? இல்லையே"ன்னிட்டு போனதும் நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.
தட்டை கழுவி வச்சிட்டு மிச்சம் மீதி சாமானையெல்லாம் அததுக்கான இடத்துல செட் பண்ணி முடிக்க சாயந்திரமாயிருச்சு. "முகேஷ்.. ஏதோ இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சரியாபோச்சு. நாளைல இருந்து ஒழுங்கா ஆஃபீஸுக்கு வேற போயாகனும். கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு .. கூட வரியா" ன்னா. ரெண்டு பேரும் ரெடியாகி பாட்டிக்கிட்டே போய் விவரத்தை சொன்னோம்.
பாட்டி, " டே முக்கேஸு.. உனக்கொரு சங்கதி சொல்றேன்.. உங்க தாத்தாவ விட நான் மூத்தவதான் தெரியுமா உனக்கு. அதனால தானோ என்னவோ கல்யாணமான நாள்ளயிருந்து அந்த மனுசன் பொறுப்புன்னா என்னனு தெரியாமயே வாழ்ந்துட்டாரு. நான் தான் உன் தாத்தாவுக்கு சோறு போட்டேன். ஹ்ம் வாழ்ந்தோம் பிரிஞ்சோம் இந்த கட்டை இன்னும் எத்தினி நாளைக்கோ த பார்ரா புருசன் பொஞ்சாதி மத்தில வயசு என்னடா வயசு மனசு ஒத்துப்போனா புலியும்,மானும் ஒரே குட்டைல தண்ணி குடிக்கலாம். என்ன நீ ரொம்ப ஒல்லி பீச்சானா யிருக்கே, மாயா ஒரு சுத்து இளைச்சி, நீ ஒரு சுத்து பெருத்தா சோடிப்பொருத்தம் சரியாபோச்சு. அது கூட முக்கியமில்லேனு வை..புருஷனை பர்த்தாம்பாங்க. பெண்டாட்டிய பார்யான்னுவாங்க. பார்யான்னா என்ன அர்த்தம்னு எனக்கு தெரியாது.. பர்த்தான்னா என்னன்னு மாத்திரம் ரொம்ப யோசிச்சிருக்கன். எதைன கொடுத்து அதுக்கு பதிலா வேற எதுனா வாங்கறத பர்த்திக்கு வாங்கறதும்பாங்க. புருசன் பெண்ணோட தகப்பனுக்கு பர்த்தியா வர்ரவன்னு அர்த்தமோ , இல்லே ஒரு காலியிடம் இருக்குன்னு வை அதுல எதையாச்சும் கொட்டி நிரப்பறதுக்கு பர்த்தி பண்ணும்பாங்க..அப்படி பொம்பளைக்குள்ள இருக்கிற பத்தாக்குறைய பர்த்தி பண்றவன் தான் புருஷன்.. அந்த பொண்ணு மனசுல என்னா காலியாயிருந்ததோ நீ என்னத்தை கொட்டனியோ அது உன்னை பார்க்கிற பார்வையிலயே ஒரு நிறைவு தெரியுது.. அந்த நெறவு அப்படியே தொடர்ர மாதிரி நடந்துக்க. பெண்பாவம் பொல்லாததுடா..உன் அத்தைக்கு நான் ஏறப்போடறத கிண்டலடிக்கிறே இல்லே ..அவ இந்த வீட்ல பொறந்த பொண்ணுடா .. ஆம்பளை நாலு இடம் போய் வரவன். ஆறு மாதிரி அதுல பிணத்தையே போட்டாலும் அது அடிச்சிக்கிட்டு போயிரும் ..அவன் மனசுல எந்த எண்ணமும் ஸ்திரமா இருக்காது. ஆனால் பொம்பளை அப்படியில்லே..அவள் வாயா வார்த்தையா குறைய கொட்டிக்கிட்டாலும் ஒன்னும் நடக்காம போயிரலாம். ஆனால் மனசு நொந்தாள்னா மாத்திரம் ஏழேழு தலைமுறைக்கு ஆகாதுடா..என் தலைல எழுதின அதே எழுத்த பிரம்மன் இந்த பொண்ணு தலைலயும் எழுதிட்டானோ என்னவோ.. உங்க தாத்தன் பண்ணின மாதிரி பண்ணாதேடா.. பொண்ணு வந்து கொடி மாதிரி அவள் தளர்வா இருக்கனும். அதான் அவளுக்கும் நல்லது, அவ புருஷனுக்கும் நல்லது, அந்த குடும்பத்துக்கும் நல்லது. ஆம்பள உரமா நிக்கனும் அதுதான் எல்லாத்துக்கும் நல்லது. கொம்பு சரியில்லாட்டா கொடி செத்துப்போகாதுதான். அதுவே உரமா வளரலாம். ஆனால் அதுல ஏதோ ஒன்னு செத்து போகுதுடா .. நீ ..ஏ கெய்வீ நீ பொம்பளைலயே சேர்த்தியில்லேம்பியே அந்த மாதிரி அந்த பொண்ணோட பெண்மையே செத்துப்போயிராம பார்த்துக்கடா.. போ போ போய்வா..உனக்கு முன்னாடி ரெண்டு அண்னனுங்க இருக்கானுங்க .. அவங்க கதைய முடிச்சு வச்சுட்டு அப்புறம் உன் கதைய பார்க்கலாம் அதுவரை பொறுமையா இருங்க.. "
பாட்டி பேச பேச... இந்த உலகத்து ஆண், பெண், அலிகளோட உயிர்களெல்லாம் எங்கே இருந்து கருக்கொண்டதோ, சகல உயிர்களோட கங்கோத்ரி எதுவோ அந்த தாய்மையே அந்த பாட்டியோட உடம்புக்குள்ள பூந்து பேசற மாதிரி இருந்தது.. நான் ஒரு புது பாட்டிய பார்த்தேன். ஹிந்தி சினிமால அமிதாப் மாதிரி அவள் காலை தொட்டு கும்பிடனும் போல இருந்தது. பக்கத்துல பார்த்தா மாயா இல்லே. எப்பவோ பாட்டி காலடில விழுந்துகிடந்தா. நான் என்னை கொஞ்சம் ஈஸி பண்ணிக்கிட்டு" மாயா.. போதும் என்னதான் மொசைக் தரைன்னா கூட உன் காட்டன் புடவை கரித்துணி மாதிரி ஆயிரும்.. எந்திரின்னேன்..
பாட்டிய பார்த்து "கெய்வீ.. நீ பொம்பளைலயே சேர்த்தியில்லேன்னேன்ல.. அந்த ஸ்டேட்மெண்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன். நீ மனுஷ ஜன்மத்துலயே சேர்த்தியில்லே.. யுவார் மை ஏஞ்சல்.. தூள் ஃபிகர்மே ! ஏதோ ஒரு ஜென்மத்துல உன்னை லவ் பண்ணாட்டி இந்த லைஃபே வேஸ்ட்" ன்னேன்.
"அடி..துடைப்பக்கட்டை.. அவன் பேச்சை பாரு பேச்சை பாடை மூஞ்சில கொள்ளியெடுத்து வைக்க"ன்னு சிரிச்சுக்கிட்டே அங்கே இல்லாத துடைப்பத்தை தேட நான் போலியா பயந்து வெளிய ஓடிவந்தேன். ஏனோ .. என் மனசுல ஒரு வித துக்கம் அலை அலையா கிளம்புது ஏன்னு சொல்லத்தெரியலை.. என் பாட்டி மாதிரி எத்தனை எத்தனை பெண்கள்.. என்னதான் இந்த சமூகம் தயாரிச்சு தந்த அருவறுப்பான ,போலியான, கனமான முகமூடிய அணிஞ்சிருந்தாலும் அதுக்கு ள்ள அழகான முகமும், நெஞ்செல்லாம் புண்ணானாலும் , சீழ் வடிஞ்சாலும் வலிய ,வேதனைய தாங்கிக்கிட்டு அந்த முகத்துல புன்னைகைய பத்திரப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க"ன்னு. தோண ஓனு கதறி அழனும் போல இருந்தது.
//கிட்ணன் (கிருஷ்ணன்) புத்தி//
ReplyDeleteராஜாவோட பேரே அது தான் ....குணமும் அதே தான் ....
//என்னதான் இந்த சமூகம் தயாரிச்சு தந்த அருவறுப்பான ,போலியான, கனமான முகமூடிய அணிஞ்சிருந்தாலும் அதுக்கு ள்ள அழகான முகமும், நெஞ்செல்லாம் புண்ணானாலும் , சீழ் வடிஞ்சாலும் வலிய ,வேதனைய தாங்கிக்கிட்டு அந்த முகத்துல புன்னைகைய பத்திரப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க"ன்னு.//
உண்மை தல ...