அண்ணன் மாரே,
இந்த தொடர்கதைய பத்தி நிறைய பேரு கேட்க நினைச்சு கேட்காத கேள்விகளுக்கு நானே பதில் சொல்லியிருக்கேன். கேள்வியும் நானே பதிலும் நானே . மேலும் படிக்க இங்கே அழுத்துங்க
மாயா, " இல்லே அங்கிள்.. முகேஷ் ..பெரிசா எதுனா சாதிக்கனும். ப்ரஷ் இருந்தாதேனே பேஸ்டு. வெறுமனே பிஸ்தா மாதிரி பீத்திக்கிட்டு புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்க கூடாது.. இந்த ஸ்டுடியோ,டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், லோக்கல் பேப்பரோட நின்னுர கூடாது. அதுக்கேத்தாப்ல முகேஷ தயார் படுத்தப்போறேன். எண்டமூரினு ஒரு தெலுங்கு எழுத்தாளர் சொல்வாரு:
இன்னைக்கு சிகரத்தை எட்டிப்பிடிச்சிருக்கிற எந்த சாதனையாளனும் அதை ஒரு நாள்ள அச்சீவ் பண்ணிரல.மனைவி மக்கள் உட்பட இந்த உலகமே தூங்கும் போது ஒவ்வொரு மி.மீ, மி.மீட்டரா கை,கால்ல தோல் உரிய ரத்தம் வழிய தான் ஏறியிருக்கான்
முகேஷ் விஷயத்துல இது நடக்க கூடாது அவன் உயர உதவ நானும் தயாராக போறேன். உங்களையும் தயார் படுத்தப்போறேன்"
அப்பா,"டேய்.. சீக்கிரமா இந்த பொண்ணு கண்டதுக்கும் நம்மை தயார் படுத்தறதுக்கு முந்தி தாயார் படுத்திரு. இல்லாட்டி நமக்கெல்லாம் ஆப்புதான்"னார் .ஹால் சுவரெல்லாம் எங்க சிரிப்பு மோதி எதிரொலிச்சது. மாயா, "வா வெட்டறே"ன்னு சைகை காட்டினாள். சென்னைல தான் வாங்கி குவிச்ச புக்ஸையெல்லாம் எடுத்து அடுக்க போக பாட்டி," ஹும்.. மாமனாருக்கு மருமக தப்பாம வந்திருக்கே.அவனும் அப்படித்தான்.புஸ்தகமா வாங்கி குவிப்பான்"ன்னாள்.
அப்பா" பாரும்மா! நான் வாங்கி குவிச்சிருக்கலாம். வெறுமனே மேஞ்சிருக்கலாம். ஆனால் கொஞ்சமாச்சும் மனசுல வாங்கிக்கிட்டது உன் பேரன் தான். உன் மருமகள் ஒரு படி முன்னே போய் படிச்சதை வாழ்க்கைல அப்ளை பண்ணி பார்க்க போறாள்"னாரு பெருமையா.
"எல்லாம் சரிடா நாங்க தான் அந்த காலத்துல சட்டி பானைகளை கட்டி அழுதோம். இன்னைக்கு எதுக்கு அந்த இழவெல்லாம்." - இது பாட்டி
உடனே மாயா, "பாட்டி ! ஓல்ட் ஈஸ் கோல்ட். ரூஷோனு பெரிய மேதை அவர்கிட்டே யாரோ உலக பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன தீர்வுனு கேட்டாராம். அதுக்கு அவரு இயற்கைக்கு திரும்பி போன்னாராம்.. அங்கிள் காலத்துல அவருக்கு தான் படிச்சத அப்ளை பண்ண அவகாசமில்லாம இருந்திருக்கலாம். ஆனால் இப்போ முயற்சி பண்ணி பார்க்கலாமில்லையா?"ன்னாள்.
பாட்டி," நீ என்னவேணா பண்ணிக்க. இந்த முகேஷு பையனுக்கு மண்டை சூடு,உடம்பு சூடு, புத்தி சூடு. மூச்சு விடாம படபடனு பேசுவானே தவிர மூஞ்சிய பாரு.. கன்னமெல்லாம் ஒடுங்கி போயி, கண்ணெல்லாம் உள்வாங்கி. முதல்ல இவனை தேத்தற வழிய பாரு. நீயும் நல்லா குனிஞ்சி நிமிர்ந்து வேலை செய்து கொஞ்சமா இளைக்க பாரு. ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்கும். நாளைக்கு பிரசவம் கூட கஷ்டமில்லாம ஆகும்"னாள்.
மாயா, வெட்கப்பட்டுக்கிட்டே அதுக்குள்ள அதுக்கெல்லாம் என்ன அவசரம் பாட்டி .. கடவுள் கொடுக்கிறப்ப கொடுப்பார்"னிட்டு என்னை பார்த்தாள்.
நான், "அப்போ ஒன் பை செவன் கூட கோவிந்தாவா? எனக்கு ஒரு நாள் டூட்டி க்ட கான்ஸலா? அதான் கடவுள் குடுக்கிறப்ப குடுப்பாரின்னிட்டேன்னியே"ன்னேன் குறும்பா
அப்பாவுக்கு ஏதோ சந்தேகம் ஸ்பார்க் ஆகி "என்னடா இது எனக்கு தெரியாம என்னென்னமோ நடக்கறாப்ல இருக்கு.. அதென்னடா ஒன் பை செவனு"ன்னு போலி மிரட்டலோட கேட்க..
மாயா வெட்கப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ளாற ஓடிப்போயிட்டா.
மறு நாள் தான் சொன்னபடியே ட்ராக் சூட்ல வந்து எழுப்பினாள். அப்பாவை எழுப்ப போறப்ப அவரு "ராத்திரி திடீர்னு என் வைஃப் அதான் உன் மாமியார் ஞா வந்துருச்சும்மா.. என்னென்னமோ பழைய ஞா தூங்கவே இல்லே. ஒரு அரைமணி நேரம் தூங்கறனே"ன்னு வாய்தா கேட்க ........
"நத்திங் டூயிங்க் அங்கிள், உங்களுக்கும் ட்ராக் ஸூட்,ஷூஸ் ரெடியா இருக்கு. பாட்டிக்கு மெசாஜ் ஆயில் வாங்கியிருக்கேன். பாட்டிக்கு மசாஜ் பண்றிங்க. முதல்ல ஆயில் புல்லிங். அப்புறம் பிராணயாமம். தென் யோகா ஃபைனலா பாட்டியோட வீல் சேர் மோட்டரை ஆஃப் பண்ணிட்டு காம்பவுண்டுக்குள்ளவே வீட்டை சுத்தி பன்னென்டு ரவுண்டு அடிங்க. உங்க கோட்டா ஓவர். நானும் முகேஷும் காலனியை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துர்ரம். நான் ப்ரிஸ்க் வாக்கிங் . அவரு ஜாகிங் நாங்க திரும்பி வந்ததும் ராகி மால்ட். அப்புறம் குளிச்சுட்டு நான் முளை கட்டி வச்சிருக்கிற பயிறு வகைகளை மென்னு சாப்பிடறிங்க"னு கச்சிதமா சொல்லிட்டா. .
ஏதோ ஒரு நாள் கூத்துனு நினைச்சா ஒரு வருஷம் பின்னி பின்னி பெடலெடுத்துட்டானு வைங்களேன். ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்தாலும். நாளடைவுல பழகிப்போச்சு. ஆறு மாசத்துல அப்பா தன்னோட மாத்திரை அலமாரிய தூக்கி செருப்பு ஸ்டாண்டாக்கிட்டாரு. பாட்டியும் வாக்கரை வச்சுக்கிட்டு மெல்ல நடக்க ஆரம்பிச்சுட்டா. என் உடம்புல மட்டுமில்லாம மன நிலைலயும் ஏகத்துக்கு மாற்றம்.இதுக்கு முன்னாடி எல்லாம் ரொம்பவே பர பரனு இருக்குமே தவிர எடுத்த வேலைல சின்ன சிக்கல் வந்தா போதும் மூட் அவுட் படக்குனு சிகரட்டை எடுத்து பத்தவச்சுருவன். அது ரொம்பவே குறைஞ்சு போச்சு. எப்பவாச்சும் மூட் அவுட்டாகி சிகரட்டை தேடினாலும் அதுக்கும் ஒரு ஆல்டர்னேட்டிவ் கண்டுபிடிச்சா மாயா அதான் ஆம்லா ( நெல்லிக்காய் +பச்சை மிளகாய் மிக்ஸ் ட்ரை ). நல்ல பசி. நல்ல தூக்கம். மாயா வாங்கிட்டுவந்த புக்ஸோட தூசு படிஞ்சிக்கிட்டிருந்த அப்பாவோட ஹோம் லைப்ரரிய கூட பிரிச்சு மேய ஆரம்பிச்சேன்.
அப்பா கூட " நீ இவனை பெரிய மனுஷனாக்கறியோ இல்லியோ மனுஷனாக்கிட்டே"ன்னு ஜோக் அடிச்சிக்கிட்டிருந்தார். மாயாவும் ஸ்லிம்மா மாறிட்டா.
வாக் போறச்ச காலனி வாசிகளோட அறிமுகம் வளர்ந்து துர்கா காலனி குடியிருப்போர் சங்கம் ஏற்பட்டுச்சு. காலனிக்குள்ள ஆடு மாடு வராம ரெண்டு என்ட் ரன்ஸ்லயும் பள்ளம் வெட்டி பைப் புதைச்சு ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் மரம் நடறது, கூர்கா அப்பாயிண்ட்மென்ட்ல இருந்து சின்னதா லைப்ரரி இப்படி என்னென்னவோ சாதனைகள். வெறும் சாதனைகளே வாழ்க்கையாயிட்டா போரடிச்சுருமில்லியா.
மாயா என் வாழ்க்கைல பிரவேசிச்ச ரெண்டு வருசத்துக்கு பிறகு 1989 ல தேர்தல் மாசம் வந்தது. எங்க லோக்கல் பேப்பர்ல நான் என்.டி.ஆரோட தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவா அந்த க்ரூப்போட விளம்பரங்களை மட்டும் போட்டு ஒரு ஸ்பெஷல் ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணேன். பஸ்ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவரும் ஸ்வீட்ஸ்டால் முதலாளியும் நம்ம பேப்பருக்கு ரெகுலர் அட்வர்டைசருமான லீலா பிரசாத் கூப்டு அனுப்பிச்சார். போனேன். காங்கிரஸ்ல டிக்கட் ட்ரை பண்ணி கிடைக்காம சுயேச்சையா நிக்கற பார்ட்டியைப்பத்தி சொல்லி அவரை ஹைலைட் பண்ணி ஸ்பெஷல் இஷ்யூ ஒன்னு போட்டுருப்பா. அதுக்கு என்ன செலவாகுமோ ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபா அதிகமாவே சொல்லு கலெக்ட் பண்ணி குடுத்துர்ரேன்னாரு.. அப்போதய வைஸ் சேர்மனும் சுயேச்சை எம்.எல்.ஏ வேட்பாளருமான ஜகன் மோகனோட அருமை பெருமைகள சொன்னாரு. "
நான்" சார் நான் என்.டி.ஆர் ஃபேன் சார். தெ.தேசத்துக்கு ஆதரவா ஸ்பெஷல் இஷ்யூ ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்"னு சொன்னேன்.
அடடா அப்படியா.. அப்போ ஒன்னு பண்ணு ந்யூட் ரலாயிருப்பா. நீயும் பஸ் ஸ்டாண்ட்ல ஸ்டுடியோ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் எல்லாம் வச்சிருக்கே. ஊருக்கு வெளிய ஒரு பஸ்ஸ்டாண்ட் புதுசா வந்திருக்கு. முதல் கட்டமா வெளி மாவட்ட, வெளி மானில பஸ்ஸுக மட்டும் அங்கே போகுது. கொஞ்ச நாள் போனா பஸ் ஸ்டாண்டை சுத்தமா தூக்கிருவாங்க. ஏதோ நம்மாளு எம்.எல்.ஏவானா பஸ் ஸ்டாண்ட் இங்கனே இருக்கும். நாமெல்லாம் ஒன்னு மண்ணா வேலை செய்தாதானே அவரும் கொஞ்சம் உற்சாகமா உதவி பண்ணுவாரு நீ மட்டும் தனி ட்ராக்ல போனா ஒட்டு மொத்தமா நம்ம எல்லாருக்குமே தலைவலியாயிரும் " அது இதுனு கன்வின்ஸ் பண்ண பார்த்தார்.
"நான் யோசிச்சி சொல்றேன் சார்"னிட்டு வந்துட்டன். ராத்திரி வீட்டு ஹால்ல இந்த டாப்பிக்கை ரெய்ஸ் பண்ணேன். அப்பா, "டேய் ! இன்னம் நீ சின்னப்பையன் கிடையாது. என் காலம் ஆயி போச்சு. உனக்கு கல்யாணமாகி பெண்டாட்டி இருக்கா. உங்க ரூம்ல அவ கிட்டே கலந்து பேசு. டேக் யுவர் ஓன் டெசிஷன்னிட்டாரு.
மாயா கட்டில்ல உட்கார்ந்து டென்ஷனா நகம் கடிச்சிட்டிருந்தா.
"என்னடா ஏதோ திருஷ்டி பட்டாப்ல. உங்க அத்தை சொன்னது நிஜம்தானோ என்னமோ ..என்னடா இது சோதனை"ன்னு எதையோ சொல்ல ஆரம்பிச்சாள்
"ஷிட்! சோதனையுமில்லே ஒரு மண்ணுமில்லே. அப்படியே இது சோதனையா மாறினாலும் நம்ம சாதனைக்கு அச்சாரம்னு நினைச்சுக்க வேண்டியதுதான். நான் என்னோட வ்யூவ சொல்றேன். அப்புறம் உன் கருத்து என்னனு சொல்லு. லெட்டஸ் டிசைட். உன் கிட்டே இத்தனை வருஷம் பழகியும் என் அரசியல் ஆர்வத்தைபத்தியோ , இளம் வயசுல என் மனசை பெரிசா பாதிச்சு, என்னை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண என் ஐடியல் ஹி பத்தியோ பெரிசா சொன்னதில்லை."
" ரியலி.. உனக்கு பொலிட்டிக்கல் இன்டரஸ்ட் உண்டா? உன் ஐடியல் ஹி யார்ரா?"
"முத கேள்விக்கான பதில் ...உண்டு. ஆனால் 365 நாளும் அதுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணமாட்டேன். என் பொலிட்டிக்கல் இன்டரஸ்டுக்கு காரணமும் என்னோட ஐடியல் ஹி யாருங்கற கேள்விக்கும் ஒரே பதில் தான் என்.டி.ஆர்"
" ஹேய் உண்மைய சொல்லு. சாதாரணமா தமிழ் காரங்கன்னா ஒன்னு எம்.ஜி.ஆர் இல்லேன்னா சிவாஜியைதானே அட்மைர் பண்ணுவாங்க?"
"இதுக்கு பதில் சொல்லனும்னா ஒரு கொசு வர்த்தி தேவை?"
"எதுக்கு?"
"உன் மூஞ்சிக்கு கிட்டே வச்சு சுத்திவிட்டுட்டுதானே ஃப்ளாஷ் பேக் சொல்லனும்"
"ஏய் .. நான் எவ்ளோ டென்ஷன்ல இருக்கேன் தெரியுமா? உனக்கு கொஞ்சம் கூட பயமில்லையா.. அரசியல்னா ச்சும்மா இல்லே வெட்டு குத்து கொலை எல்லாம் நடக்கும்"
"அடடே .. இதெல்லாம் இப்பத்தான் ஞா வருதா? என்னவோ இந்த நாட்டுக்கே ராசா ஆகனும் எம்.ஜி.ஆர் படம் மாதிரி தாய்குலத்தோட கண்ணீரை எல்லாம் துடைக்கனும்னே"
" இப்பவே கர்சீஃபை எடுத்துக்கிட்டு ஓடுனு சொல்லலியே.. அதுக்கு ப்ரிப்பேர் ஆகுன்னு சொன்னேன்"
"தி லைஃப் டசன்ட் கேர்ஸ் யுவர் பிரிப்பரேஷன்"
" நீ ஃபௌல் ப்ளே ஆடறே.. இன்னம் டிஸ்கஷனே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள டெசிஷனை அனவுன்ஸ் பண்றே"
"டெசிஷனுமில்லே ஒரு இழவுமில்லே. யதார்த்தத்தை சொன்னேன்.."
"சரி..சரி ஒரு தமிழனான நீ எப்படி என்.டி.ஆர் ஃபேனா மாறினே.. அத சொல்லு"
"ஆறாம் வகுப்பு படிக்கிற சமயம் எங்களுக்கு ஐன்ஸ்டீன்னு ஒரு வாத்தியார் இருந்தான். ஒரு மேதையோட பேர வச்சுக்கிட்டு அவன் பண்ண லொள்ளையெல்லாம் சொன்னா அது தனிக்கதையாயிரும். இண்டியன் இங்க், அமாவாசை, இப்படி எத்தனை உவமை சொன்னாலும் அவன் நிறத்துக்கு ஈடாகாது. க்ளாஸ் ரூம்ல எம்.ஜி.ஆர் கொள்கை பாட்டெல்லாம் பாடிக்காட்டுவான். பால் பாயிண்ட் பேனா யூஸ் பண்ணக்கூடாதும்பான். திடீர்னு பணம்.... பணம்... பணம் என்னடா பணம்னு வாட்சை கழட்டி எறிவான். (ஸ்கூல் கிரவுண்ட்ல மணல்ல க்ளாஸ் நடக்கறப்ப மட்டும்).ஆனா காந்தி மாதிரி நினைப்பு ரெண்டு குட்டிகளை கூட்டி பக்கத்துல நிக்க வச்சிக்கிட்டு அவிக மேல கைய போட்டுக்கிட்டுதான் பாடம் நடத்துவான். ( இண்டோர்ல க்ளாஸ் நடக்கறப்ப மட்டும்) , இவனாச்சும் உரசறதோட சரி . இவனுக்கு கூட்டுக்களவாணி வாத்தி ஒருத்தன் இருந்தான். அவனும் கருப்பு தான் ஆனா ஐன்ஸ்டீன் மாதிரி மூஞ்சுறு மூஞ்சி கிடையாது. நல்ல அத்தெலட்டிக் பாடி. பேஸ்கட் பால் அது இது ஆடி மாஃப் பண்ணுவான். இவிக ரெண்டு பேரும் கூட்டா ட்யூஷன் நடத்த ஐன்ஸ்டீன் உரசறதோட நிறுத்திக்குவான் போல. இந்த கூட்டுக்களவாணி நிறைய பொண்ணுகளை கர்பமே ஆக்கிட்டான். ஸ்கூலே நாறிப்போச்சு. இப்போ மாதிரி அப்போ மீடியா எல்லாம் கிடையாது. அதனால பொழச்சானுவ."
"ஆனாலும் நீ ரொம்ப மொக்கை போடறே.. நீ ஏன் என்.டி.ஆர் ஃபேனா மாறினேன்னு சொல்ல வந்து வாத்தி ,கூத்தினு டைவர்ட் ஆயிட்டே"
" பொறு மகளே பொறு ! விஷயத்துக்கு வரேன். மேல சொன்ன ரெண்டாவது வாத்தி விஷயத்துலயாவது நான் கொஞ்ச நாள் ஏமாந்தது உண்டு. ஆனால் ஐன்ஸ்டீன் விஷயத்துல மட்டும் ஆரம்பத்துலயிருந்தே ரெபலா தான் இருந்தேன். ஈது இப்படியிருக்க ஒரு நாள் என்.டி.ஆரை பத்தி டாப்பிக் வந்தது. அப்போ அவரோட அடவி ராமுடுங்கற படம் (காட்டு ராமன்னு அர்த்தங்கண்ணா) வந்து போச்சுனு நினைக்கிறேன்.
அதுல ஒரு பாட்டு :
ஆரேசு கோ போயி பாரேசுகுன்னானு ஹரி ஹரி
கோக்கெத்துகெள்ளிந்தி கொண்ட காலி
நுவ்வு கொண்டெ சூப்பு சூஸ்தேனே சலி சலி
அதனோட அர்த்தம்:
காய வைக்க போயி தொலைச்சிட்டன்
சேலைய மலை காத்து எடுத்துட்டு போயிருச்சு
நீ இப்படி குறும்பு பார்வை பார்த்தா
குளிரெடுக்குது
இந்த பாட்ட வச்சு என்.டி.ஆரை பயங்கரமா நக்கலடிச்சுட்டிருந்தான். எனக்கா பயங்கர கடுப்பு (எல்லாம் க்ளாஸ் நடுவுலதான்).
" நல்ல விஷயம் தானே..இதுக்கு நீ ஏன் கடுப்பானே. பசங்க அந்த மாதிரி செக்ஸுவல் லிரிக்கெல்லாம் கேட்க கூடாது பார்க்க கூடாதுனு தான் அப்படி பேசியிருக்காரு"
"உன் மூஞ்சி.. அவன் சைக்காலஜி எனக்கில்லே தெரியும். இவன் வாத்தி. நாங்க படிச்ச ஸ்கூலு பைலிங்குவல் . தமிழ் தெலுங்கு ரெண்டும் உண்டு. தெலுங்கு 4 செக்சன் இருக்கும். தமிழ் ஒரு செக்சன் தான். தெலுங்கு வாத்தியாருங்க மெஜாரிட்டி. தமிழ் வாத்யாருங்க மைனாரிட்டி. இவனுக்கு இன்செக்யூரிட்டி. இவன் நோயை எங்களுக்கும் தொத்த வைக்க தமிழ் பசங்க ஒத்துமையா இருக்கனும். அவிக நம்ம க்ளாசுக்குள்ள வர கூடாது, நம்ம பொண்ணுகளை கலாய்க்க கூடாது அது இதுன்னு ஊத்துவான். மொத்தத்துல இந்த மாதிரி மொழி,இனம்,சாதி சார்ந்த வாதத்தை எடுத்துவைக்கிற ஒவ்வொருத்தனும் சைக்கலாஜிக்கலா வீக்காயிருப்பான், இன்செக்யூரிட்டி ஃபீலிங்க் இருக்கும், ஹிடன் அஜெண்டா இருக்கும், அதுல சுய நலம் தவிர வேற இருக்க்காது.
என்.டி.ஆரை அவன் நக்கலடிக்க காரணம் செக்ஸ் இல்லே.அவர் தெலுங்கர்ங்கறதுதான்.. செக்ஸுன்னு பார்த்தா இவன் நக்கலடிச்ச என்.டி.ஆர் பாட்டை விட இவன் தலை மேல வச்சு கொண்டாடின எம்.ஜி.ஆர் பாட்ல தான் அதிகம். ஹீரோயின் மாங்கா தோப்புல மாங்கா திருடுவா. அவளை பிடிச்சு அவளை கலாய்ச்சு வாத்தியார் பாட்டுபாடுவாரு "துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே .. பளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே" "மாங்கா திருடி திங்கற பெண்ணே மாசம் எத்தனையோ" இப்படி ஒன்னு ரெண்டில்லே. ஆபாச களஞ்சியமே உண்டு"
" சரி உனக்கு ரெண்டு மொழியும் தெரியுங்கறதால நீ சொல்றத நம்பறேன். ஐன்ஸ்டீன் என்.டி.ஆரை நக்கலடிச்சதுக்கும், நீ அவரோட ஃபேனா மாறினதுக்கும் என்ன சம்பந்தம்?"
"இந்த வயசுலனு இல்லே அந்த வயசுலருந்தே நமக்கு சில குன்ஸ் எல்லாம் உண்டு.
ஒரு உதவாத நாய் இன்னொரு பார்ட்டிய பத்தி டீ க்ரேட் பண்ணி பேசினா அந்த பார்ட்டிக்கிட்டே ஏதோ ஸ்பார்க் இருக்கும்ங்கறது நம்ம நூத்தி எட்டுல குன்சுல ஒரு குன்ஸ். அன்னைக்கு சாயந்திரமே அப்போ டவுன்ல ஓடிக்கிட்டிருந்த என்.டி.ஆர் படத்துக்கு போனேன். படம் பேரு சேலஞ்ச் ராமுடு. சின்னவயசுலருந்தே சேலஞ்சுனு வந்தா எவ்ளோ பெரிய ரிஸ்காவது எடுக்கிற கேரக்டர் என்.டி.ஆருக்கு. ஸ்க்ரீன்ல பார்க்க மாமா மாதிரி இருந்தாலும் சினிமால எல்லா கேரக்டரும் அவரை இளைஞனா ட்ரீட் பண்றது மட்டும் உறுத்தினாலும் அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. மேலும் அதுல ஒரு வஸ்திராபரண காட்சியும் இருந்ததுன்னு தனியே சொல்ல தெவையில்ல. ஹீரோயின் நம்ம ஜெயப்ரதா. ஒரு சீன்ல எறும்புகளை எடுத்து ஜாக்கெட்டுக்குள்ள விட்டுருவார். ஆக என்.டி.ஆர் எனக்கு அறிமுகமானதோட என்னோட ஆதர்ச ஹீரோவும் ஆயிட்டாரு."
"நீ வெறுத்த ஐன்ஸ்டீனை வெறுப்பேத்த அவர் வெறுத்த என்.டி.ஆரோட ஃபேனா மாறிட்டே.. அப்படித்தானே.. "
"இல்லே கண்ணு.. இந்த டுபாகூர் பார்ட்டி சொல்றத நம்ப கூடாது. நாமளே போய் ஒரு நடை பார்த்துருவம்னு போனேன். என்.டி.ஆர் என்னை வீழ்த்திட்டாரு"
"ஆமாம் என்.டி.ஆர் ஆக்சுவலா சினி ஹீரோ தானே அவருக்கு எப்படி பொலிட்டிக்கல் இன்டரஸ்ட் வந்துருச்சு?"
" காங்கிரஸ் மந்திரி சபைல துணை மந்திரியா இருந்த சந்திரபாபுவுக்கு பொண்ணை குடுத்தார். காங்கிரஸ் கலாச்சாரப்படி அடுத்த மந்திரி சபை மாற்றத்துல பாபுவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. அப்போ இந்திரா அம்மையார் தான் பி.எம். நம்மாளு போய் மாப்பிள்ளைக்கு வேலை கேட்டு ப்ரஷர் கொடுத்தார். ஜெனரலாவே நம்ம சவுத் இண்டியன்ஸ்னா வடக்கு பக்கத்துல கொஞ்சம் அண்டர் எஸ்டிமேஷன் தானே. இந்திரா காந்தி போடாங்கோன்டா மாரி கீது. தலை சொந்த ஊருக்கு திரும்பி வந்து வந்து புது கட்சி அனவுன்ஸ் பண்ணிட்டாரு. அப்போ நான் இன்டர் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். பாஸ்ட் ஃபோர் இயர்ஸ்ல அவர் என்னென்ன படம் நடிச்சாருங்கறது மட்டும் தான் தெரியும் . அதுக்கு முன்னாடி அவரோட கிராஃப் என்னன்னு தெரியாது (மொழி பிரச்சினைங்கண்ணா) ப்ரி ப்ளாண்டா பண்ணதா. இல்லே தானா அமைஞ்சதானு தெரியாது. ஃபிஃப்த் இயர் ரிலீசான படமெல்லாம் மாஸ்+க்ளாஸ். மெசேஜிருக்கும். என்டர்டெயின்மென்டும் இருக்கும். இன்னம் கேட்கனுமா.. என்.டி.ஆர் பார்ட்டி வச்சதும் வரிஞ்சி கட்டி களத்துல குதிச்சாச்சு."
"ஐ ஸீ.. அப்ப உனக்குனு ஒரு பொலிட்டிக்கல் ஐடியாலஜி இருந்ததுனு சொல்லு"
"ஐடியாலஜி இல்லேம்மா.. என்.டி.ஆர் ஜஸ்ட் என்னோட ஐடியல் ஹி. அவர் என்ன பண்ணாலும் ஓகேங்கற ஸ்டேஜுதான் இப்ப கூட"
"எப்படி இருந்தது உன் அரசியல் வாழ்வு?"
"வாழ்வா? இழவா?முன்னே பின்னே செத்திருந்தாதேனே சுடுகாட்டுக்கு வழி தெரியும். தமிழ் நாட்ல பிராமணாளோட புத்தி,சேஷ்டைல பாதி கொண்ட சாதி ஒன்னு இங்கே உண்டு. அவிக அடுத்த ஷோவுக்கு இந்த ஷோலயே கர்சீஃப் போட்டு வந்துர்ர அளவுக்கு அறிவாளிக. போதாததுக்கு என்.டி.ஆரும் அவிக சாதியே. அப்படியே ஒரு க்ரூப் போயி பார்ட்டில ஐக்கியமாயிருச்சு. ஒரு பொம்பளைக்கு எம்.எல்.ஏ டிக்கட்டும் வாங்கிருச்சு. இதையெல்லாம் ஒரு சாதி காரங்க செய்தாங்கனு சொல்லிர முடியாது. ஜஸ்ட் ஒரு குடும்பம்."
"அப்போ என்.டி.ஆருக்கும் சாதி வெறி இருந்ததுனு அர்த்தம் அப்படித்தானே?"
" நோ நோ ..இதை வச்சு என்.டி.ஆர்க்கு சாதிவெறி இருந்ததுனும் சொல்லிர முடியாது. டாக்ஸி ட்ரைவருக்கு, பஸ் கண்டக்டருக்கெல்லாம் சாதி,மதம் பார்க்காம சகட்டுமேனிக்கு டிக்கெட் கொடுத்தாரு. ஜெயிச்சாரு. லோக்கல்ல நானும் கொடி பிடிச்சேன். திருட்டு ஓட்டு போட்டேன். 1984 ஆகஸ்டுல ஒரு பொலிட்டிக்கல் கெலாமிட்டி. நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்பயும் ரோட் ரோடா அலைஞ்சேன். மறுபடி எலக்சன். பதவி காலம் முடிஞ்சி இப்ப எலக்சன் வந்திருக்கு"
"ஆமா வெற்றி வாய்ப்பெல்லாம் எப்படி?"
"எவன் கண்டான்? தலைவர் என்னவோ சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னு ரெண்டு ரூபாக்கு அரிசி. மீட்டரில்லாம விவசாயிகளுக்கு 250 ரூபாய்க்கே கரண்டுனு வாரி விட்டுக்கிட்டிருக்காரு. தாய் குலத்துக்கு சொத்துரிமை, முதல் மகளிர் பல்கலை கழகம்னு ஏதோ கொஞ்சம் செய்திருக்காரு. சி.எம்மா இருந்துக்கிட்டே பிரம்மங்காரு படம் எடுத்தாரு. மக்கள் மனசுல என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?"
"இதென்ன முகேஷ்.. வெற்றி வாய்ப்பு எப்படியிருக்குனு தெரியாம இப்படி சைட் எடுத்தா ரிஸ்கில்லயா?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது .என்.டி.ஆர். ஈஸ் மை ஐடியல் ஹி. அவரு தோற்க கூடாது. என் கேரக்டர்ல ஏதோ கொஞ்சமாச்சும் தன்னம்பிக்கை ,சுய கவுரவம் தெரிஞ்சா அது அவர் கொடுத்தது. அவர் தோத்தா நான் தோத்த மாதிரி"
"சரி முகேஷ் ஸ்டேட் பாலிடிக்ஸ் இருக்கட்டும். லோக்கல் நிலவரம் எப்படி?"
"அதான் சொன்னேனே ..ஒரு சாதி ஒரு குடும்பம்னு கட்சியோட பேரை எவ்ளோ கெடுக்கனுமோ அந்த அளவுக்கு கெடுத்துவச்சிருக்கானுவ. பீமன்னு ஒரு ரவுடி. அவனை வச்சு ஆன அட்டூழியம்லாம் பண்றது. அவன் இவிகள பேக்கிரவுண்டா வச்சிக்கிட்டு ஆன அநியாயம்லாம் பண்றது நடந்துக்கிட்டிருக்கு. மேலும் சாதி வெறி,மொழி வெறி எல்லாமிருக்கு. ஆனா இப்ப சுயேச்சையா நிக்கிற ஆளு ஸ்டூடண்ட் லீடர். டைனமிக் பர்சனாலிட்டி. எதிரி தான் என் களத்தை நிர்ணையிக்கிறான்னு எதுக்கு வேணம்னாலும் துணிஞ்ச பார்ட்டி. இந்தாளை போட்டு தள்ள இதுவரை மூனு தடவை அட்டெம்ப்ட் பண்ணியிருக்காங்க"
"அப்போ .. நீயும் சுயேச்சை கேண்டிடெட்டையே சப்போர்ட் பண்ணலாமே?"
"ஆங்! அதெப்படி. இந்தாளு காங்கிரஸ்ல டிக்கட்டுக்கு அலை மோதி அங்கே கிடைக்காம சுயேச்சையா நிக்கிறான். நாளைக்கு ஜெயிச்சுட்டா காங்கிரஸுல சேரமாட்டானு என்ன கியாரண்டி?"
"காங்கிரஸுன்னா உனக்கென்ன வெறுப்பு?"
"இந்திய அரசியல் வரலாற்றுல எமர்ஜென்சி பீரியட், ஜனதா கட்சி துவக்கம், மொரார்ஜி தேசாய் பிரதமரானது முதல் கொண்டு நமக்கு பரிச்சயம். புரியுதோ இல்லையோ படிச்சுர்ர வழக்கம் சின்ன வயசுலயே இருந்தது. நீ கேட்ட காங்கிரஸ் வெறுப்பு எப்படி வந்ததோ தெரியாது விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து காங்கிரஸ்னாலே ஒரு அலர்ஜி."
"அதான் ஏனு கேட்கறேன்?"
" அதுக்கெல்லாம் காரணம்னு ஒன்னுமிருக்காது. இப்ப நீன்னா எனக்கு லவ் . அதுக்கு காரணம் என்ன?"
"மதர்லி லுக் அது இதுனு நீதானே சொன்னே"
"அப்ப எவளாச்சும் ரெண்டு பெத்தவளை பிக் அப் பண்ணியிருந்தா மதராவே இருந்திருப்பா இல்லியா? உன்னையே ஏன் லவ் பண்ணனும்?"
"சரி சரி நீ இன்னம் அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுருவ. இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு? அதை சொல்லு"
"பேசாம கேண்டிடெட்டையே பார்த்து பேசிட்டா போவுது"
"என்ன பேசுவே?"
"என் மனசு இப்படி. அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு ரிக்வெஸ்ட் பண்றது"
"வேணா முகேஷ்! அந்தாள பத்தி என்னென்னவோ பேசிக்கிறாங்க. நீ துடுக்கா எதுனா பேசி ரசாபாசமாயிர போவுது"
"அய்யய்யே ..அந்தாளும் ரெண்டு கை,ரெண்டு கால் இருக்கிற கேஸ் தானே. இதை இப்படியே விட்டா ச்சும்மா ச்சும்மா ஆளுங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க.அதை விட இது பெட்டர்."
மறு நாள் சுயேச்சை கேண்டிடெட்டை பார்க்க போறதா அப்பாகிட்டே சொன்னேன்." போ போ.. மாயாவையும் கூட்டிப்போ"ன்னாரு.
ரயில்வே கூட்ஸ் ஷெட் கிட்டே அவரோட வீடுனு தெரியும். ஆட்டோ ஏறி அவர் பேரை சொன்னதுமே ட்ரைவர் ஊருக்காக அவர் ஒரு யுத்தத்தையே ஆரம்பிச்சிருக்காரு வெறுங்கையா போறிங்களேன்னான். மாயா கிராண்ட் கலெக்ஷனுக்கு ஆட்டோவை விடச்சொல்லி ஷீர்டி சாயிபாபா பொம்மை ஒன்னு வாங்கிகிட்டா.
ஆட்டோ காரன் வாயெல்லாம் பல்லா ஜகனோட புகழ் பாடிக்கிட்டே வந்தான். கூட்ஸ் ஷெட் வந்தோம். சித்தூரே அந்த இடத்துக்கு பெயர்ந்து வந்துட்டாப்ல இருந்தது. கூட்டம் நெறியுது. நல்ல வேளையா லீலா பிரசாத் இருந்தாரு. அவரு "என்னப்பா நல்ல முடிவோடதானே வந்திருக்கே"ன்னாரு. நான் மையமா சிரிச்சேன்.
ஜகன் ஜீன்சும், ப்ளாக் டீ ஷர்ட்டும் போட்டிருந்தாரு. நாலு பேர் அவரோட நெருக்கமா என்னமோ சீரியசா பேசிக்கிட்டிருந்தாங்க. மாயா கைல வச்சிருந்த பாபா சிலைய பார்த்ததுமே எங்க கிட்டே வந்தாரு. மாயாவை அடையாளம் கண்டு கிட்டாரு. பக்கத்துல இருந்தவங்க கிட்டே " பாருங்கப்பா துர்கா காலனியோட தலை எழுத்தயே மாத்திருச்சு ஒரு அம்மானு அப்பப்ப சொல்வேனே இதான் மாயா ..பாருங்க எவ்ள சிம்பிளா இருக்காங்க"ன்னாரு ஜகன்.
நான்"சார்! உங்க கிட்டே அஞ்சு நிமிஷம் கொஞ்சம் தனியா பேசனும்"னேன்.
"அதுக்கென்ன பேசிட்டா போவுது. வாங்க உள்ள உட்காருவோம்"
"சார்! நான் என்.டி.ஆர் ஃபேன்."
"அப்படியா நானும் என்.டி.ஆர் ஃபேன் தான். அவரால இன்ஃப்ளுயன்ஸ் ஆகாம எவனாச்சும் தப்பிச்சா அவன் ஆம்பளையே கிடையாதுனு அர்த்தம்..உனக்கு சொன்னா நம்புவயோ மாட்டியோ போன எலக்சன்ல அவர் பார்ட்டி வச்ச புதுசுல எனக்குதான் டிக்கட் ஆஃபர் பண்ணாரு. நானு பார்ட்டி தான் முக்கியம்னு பிடி கொடுக்காம விட்டுட்டேன். எங்காளுங்க கதை தெரியுமில்லியா. உனக்கு தான் உனக்குதான்னிட்டு கொடி பிடிக்க வச்சிட்டாங்க. இந்த எலக்சன்லயும் அதே கதைதான். ஆனா ஃப்ரெண்ட்ஸ் தான் இதை இப்படியே விடகூடாது. நாமினேஷன் போட்டே ஆகனும்னிட்டாங்க."
"சார் ! நான் ஒரு தர்ம சங்கடமான நிலைல இருக்கேன்"
"சொல்லுப்பா. என்னால முடிஞ்ச உதவி நிச்சயம் உண்டு. அட்லீஸ்ட் இந்தம்மாவுக்காக, இவுங்க கொடுத்த பாபா சிலைக்காக. "
"உங்களுக்கு பார்ட்டி முக்கியம்னு எப்படி வந்த டிக்கட்டை வேணாம்னிட்டிங்களோ. அதே நிலைமைல நான் இருக்கேன். உங்களுக்கு பார்ட்டி முக்கியம். எனக்கு என்.டி.ஆர். "
"கரெக்டுப்பா. ஆனா அவர் பேரை சொல்லிக்கிட்டு ஒரு சாதி ..ஷிட் சாதி கூட கிடையாது ஒரு குடும்பம் அடிக்கிற கூத்து என்னனு தெரியும்லியா.. ஒரு ரவுடிய வச்சிக்கிட்டு கட்டை பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அவன் பண்ற அட்டூழியத்துக்கெல்லாம் ஸ்டேஷன்ல வக்காலத்து வாங்கிக்கிட்டு.. ஒரு பொம்பள தைரியமா ரோட்ல நடமாட முடியலப்பா. "
"சார், நீங்க சொல்றதெல்லாம் நிஜம் தான். ஆனால் பெரியவர் இருக்கிற வரை என்னால அவருக்கு விரோதமா வேலை செய்ய முடியாது சார். எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா அந்த குடும்பத்தையே கட்சிய விட்டு தூக்க வச்சிருப்பேன்"
ஒரு செகண்ட் என்னையே உறுத்து பார்த்த ஜகன் " ஓகேப்பா.. ஏறக்குறைய என்னை மாதிரியே யோசிக்கிறே. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். தெலுங்கு தேசம் தப்பித்தவறி ஜெயிச்சாலும் அவர் சி.எம்மா கன்டின்யூ ஆக முடியாது. அப்போ நாதேள்ளா இப்போ ஜெயிச்சா மாப்பிள்ளா . ஆப்பு வைக்கப்போறது சத்தியம். ஒரு வேளை கட்சி என்.டி.ஆருக்கு விரோதமா போனா அப்போ உன் ஸ்டாண்ட் என்ன?"ன்னாரு
கொஞ்ச நாழி யோசிச்சி பார்த்த நான் "கட்சி கிட்சியெல்லாம் எனக்கு தெரியாது சார். எனக்கு தெரிஞ்சதெல்லாம் என்.டி.ஆர்ங்கிற பர்சனாலிட்டிதான். கட்சி அவருக்கு விரோதமா போனா அதையெல்லாம் தூக்கி கடாசிட்டு உங்க பக்கம் வந்துர்ரன்".னேன்
உடனே எங்களை வெளிய கூட்டி வந்த ஜகன் தன்னோட ஆட்களுக்கு சொன்னாரு. " பாருங்கப்பா.. "இவர் என்.டி.ஆர் ஃபேன். அந்த கட்சிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் ஏஸ் என் என்.டி.ஆர் ஃபேன் என்.டி.ஆரோட பாலிசிகளை பிரச்சாரம் பண்ணுவாரு. இவருக்கு நம்ம சைட்ல இருந்து எந்த பிரச்சினையும் இருக்ககூடாது. நல்லா பார்த்துக்கங்க"ன்னாரு.
ஜகனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு மவுனமா வெளியே வந்தோம். நான் ப்ளான் பண்ணபடியே என்.டி.ஆருக்கு ஆதரவா ஸ்பெஷல் இஷ்யூ ரிலீஸ் பண்ணேன். டவுன் முழுக்க டிஸ்ட்ரிப்யூட் ஆச்சு. எலக்சன் தினமும் வந்தது. போலிங் ஆச்சு. ரிசல்ட் வந்தது. மெஜாரிட்டி ஆஃப் சீட்ஸ் காங்கிரஸ் ஜெயிக்க நூத்துக்கும் மேலான தொகுதிகள்ள தெலுங்கு தேசம் ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டு வித்யாசத்துல தோத்து போச்சு.
என் டிக்ஷனரில தோக்கடிக்கவே முடியாத மனுஷனா இருந்த என்.டி.ஆர் ரெண்டு தொகுதில போட்டியிட்டு ஒரு தொகுதில தான் ஜெயிக்க முடிஞ்சது. என்.டி.ஆரோட தோல்வி என்னை ரொம்பவே பாதிச்சுருச்சு. என்னை மட்டுமில்ல என் எதிர்காலத்தையும் தான்.
No comments:
Post a Comment