Friday, March 5, 2010

அம்மா ,அக்கா , காதலி , ஆச்சு இப்ப அண்ணியா?

மாயா கடை கடையா ஏறி இறங்க எரிச்சலா இருந்தாலும் எங்க குடும்பத்து கேரக்டர்களை பத்தி அட்லீஸ்ட் சிறுகுறிப்புகளையாவது வரைய அந்த சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்கிட்டேன். ஒரே மூச்சுல பேசாட்டாலும் கிடைச்ச கேப்ல மாயா கேட்ட கேள்விகெல்லாம் பதில் சொல்லி புரிய வச்சிக்கிட்டே வந்தேன்.

"ஏய் உங்கம்மாவ பத்தி சொல்லேன்"

" எங்க அம்மாவ பத்தி சொல்லனும்னா நீ பசி படம் பார்த்திருக்கயா?"
"உம் பார்த்திருக்கேன்.. அதுல நடிச்சிருக்காங்களா?"
"இதெல்லாம் ஓவர்.. அவிக கல்யாண ஆல்பத்துல பசி ஷோபா மாதிரியிருப்பாங்கனு சொல்றேன். "
"அப்புறம்?"
" உன்னை மாதிரி ஆயிட்டாங்க.."
" த பார்ரா .. அதனால தான் என்னை அப்பப்ப டாவு கட்டற மாதிரி பேசறியா?"

" நான் மட்டுமில்லை .. எந்த பையன் எந்த பொண்ணை லவ் பண்ணாலும் அவன் அந்த பொண்ணுல தன் தாயோட அம்சத்தை கண்டு கவரப்பட்டு தான் லவ் பண்றானு சைக்காலஜி சொல்லுது"

"அப்போ பொண்ணுங்க எப்படி லவ் பண்ணுது?"

"பையன்ல தன் அப்பனோட அம்சத்தை கண்டு கவரப்பட்டு லவ் பண்ணுது "

"உங்க பாட்டி உணர்ச்சி வசப்பட்டு ராதா கிருஷ்ணன் கதையெல்லாம் சொன்னாலும் உன்னை நான் லவ் பண்றேனான்னு சந்தேகமா இருக்கு. ஆனால் உனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு ஒத்துமை இருக்கு"

"என்ன அது ?"

"எனக்கு பிரச்சினைன்னா எங்கப்பா மைண்ட்லருந்து லாஜிக் காணாம போயிரும் "

" நான் வில்லேஜுக்கு போய் உதை வாங்கிட்டு வந்ததை சொல்ற அப்படித்தானே.. இப்ப எங்கம்மாவ பத்தி கேட்டது நீ சொல்ட்டா வாணாவா?"

"டே டே கோச்சுக்கற பார்த்தியா ..உனக்கு நான் ஒரு சிகரட் வேற கடன்..என் கையால  கொள்ளி வேற வைக்கறதா சொல்லியிருக்கேன்"

"எனக்கா?"

"உனக்குதான் நீயெ வச்சுக்கறியே .. ஒரு நாளைக்கு பத்து பன்னென்டு சிகரட் பிடிச்சு .. நான் சொல்லவந்தது சிகரட்டுக்கு"

மாயா பரபரவென்று நடந்து அந்த தெருவோர டீக்கடைக்கு போனா. டீ ஆர்டர் பண்ணிட்டு என்னமோ வருஷ கணக்கா அந்த கடைக்கு ரெகுலர் கஸ்டமர் மாதிரி கல்லா மேல இருந்த என்னோட  பிராண்ட் சிகரட் பேக்கட்டை எடுத்து ஒரு சிகரட்டை உருவி என் வாய்ல வச்சு லூஸு பொட்டிய எடுத்து கொளுத்தினா.. டீ ஆத்த போன மாஸ்டர் வாய்ல ஈ.. டீய குடிச்சுட்டு வெளிய வர்ரதுக்குள்ளே அந்த கடைக்குள்ள இருந்த பயலுவ எல்லாம் என்னை பார்வையாலயே பஸ்மம் பண்ணிட்டானுக. இப்பத்தான் மாயாவ புதுசா பார்க்கிறேன். என்னதான் உல்வா பஸ் மாதிரி சைஸ் பெரிசா இருந்தாலும் அந்த முகத்தை பார்த்தா, அந்த கண்ல இருக்கிற குறும்பை பார்த்தா 18 க்கு மேல சொல்லமுடியாது. அதான் பயலுவ வயிறெரிஞ்சு சாகறானுங்க.

மாயா ஞாபகமா உசுப்பி விட்டா "அம்மாவ பத்தி சொல்லிட்டிருந்தே"

"சொல்றேன்..அம்மா அந்த காலத்து எஸ்.எஸ்.எல் சி அரக்கோணத்துல  ஸ்கூல் டீச்சர். மணியகாரர் மகள். அந்த காலத்துல கழுதை மேய்க்கிற வேலையா இருந்தாலும் கவர்மென்டு வேலையாயிருக்கனும்னு ஒரு சம்பிரதாயம் இருந்தது போல. மணியகாரர் ஸ்டேட் பார்டர் தாண்டி எங்கப்பாவ வலை வீசி தேடிபுடிச்சாரு. அவரோட துரதிர்ஷ்டம் எங்கப்பன் அம்மா புள்ளை. தன்னோட 2 தம்பி, ஒரு தங்கச்சி மட்டுமில்லாம பெரியம்மா பையன் குடிகார லட்சுமணனுக்கு கூட படியளந்து , நிழல் கொடுத்து வாழ்க்கை கொடுக்க வேண்டிய  நிலைல இருந்தான். கல்யாணமான ரெண்டாவது மாசமே சட்டிய தூக்கச்சொல்ற பொம்பளைக நடுவுல எங்கம்மா வாய் செத்தவளா இருந்திருக்காங்க. சனம் நல்லாவே மேய்ச்சிருக்காங்க. எங்கப்பன்
ஸ்ட்ரெயிட் ஃபார்வார்டு கேஸாச்சே..ஜில்லா ஜில்லாவா தூக்கியடிச்சிருக்காங்க. ரெண்டு குடித்தனமாகிப்போச்சு. அந்தாளு அங்கே ரூம்ல தங்கி வேலை பார்க்கனும், இங்கே குடும்பம் நடக்கனும்.ரொம்ப நாள் வரை வாடகை வீடுதான். அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் இன்ஷியேட் ஆகி வீட்டை வாங்கினாங்க. சர்வீஸ்ல கடைசி 5 வருஷம் சித்தூர்ல போட்டதால ஏதோ இவ்ள மாத்திரம் வீட்டை கட்டினாங்க. ரெண்டு சித்தப்பனுக்கு கல்யாணம் பண்ணி, ஒரு அத்தைக்காரிக்கு கல்யாணம் பண்ணி டாரா கிழிஞ்சு போயி அதுக்கப்புறம்தான் சொந்த வீடு, கண்ணுக்கெதிர்க்க புருஷன்னு எங்கம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாங்க . கடவுளுக்கு பொறுக்கலே. யூட்ரஸ்ல கான்ஸர். போயி சேர்ந்துட்டாங்க."

"முகேஷ் ! உண்மைய சொல்றேன்  உங்கம்மாவ பத்தி பேசறப்ப அவங்க மேலஉனக்கு பாசத்த விட ஒரு வித  வெறுப்புதான் வெளிப்படுது ..ஏன் அப்படி?"

"கரெக்டா கேட்ச் பண்ணே.. எங்கம்மா மேல மட்டுமில்லை. இந்த உலகத்துல இருக்கிற எல்லா அம்மா மேலயும் எனக்கு வெறுப்புதான். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். பொறுப்பு,தியாகம்,விட்டுக்கொடுத்தல் எல்லா இழவுக்கும் ஒரு அளவு இருக்கு. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் பாய்சனாயிரும். இதை  நிறைய அம்மாங்க புரிஞ்சிக்காம தியாக தீபமா வாழ்ந்துட்டு மத்தவங்களுக்கு வெறும் குற்ற உணர்ச்சிய விட்டுட்டு  போய் சேர்ந்துர்ராங்க.. அம்மா சென்டி மென்ட் படமெல்லாம் சூப்பர் ஹிட் ஆகுதே. அதுக்கு காரணம் இதான். எந்த கம்னாட்டியும் தன் தாய் உயிரோட இருக்கிறப்ப அவளை கண்டுக்கறதில்லை. அவள் போய் சேர்ந்த பிறகு அரைவேக்காட்டு பொம்மனாட்டிய மனைவியா அடைஞ்சி அவ பண்ற இம்சையால தாயை நினைச்சு உருகறவந்தான் .. அதனால தான் அம்மா சென்டிமென்ட் எவர் க்ரீன் சப்ஜெக்டா இருக்கு,.இப்போ எங்கப்பனையே எடுத்துக்கயேன்..எங்கம்மா உயிரோட இருந்தவரை என்னமா நெக்லெக்ட் பண்ணியிருக்காரு தெரியுமா ? திடீர்னு எங்கம்மா மேல எனக்கு இனம் புரியாத அஃபெக்ஷன் ஏற்பட்டுரும். அன்னைக்கு சமையலறையை எல்லாம் ஏறக்கட்டி, டப்பாவெல்லாம் கழுவி, ஸ்டவ் துடைச்சி,மேடை கழுவி ஹதம் பண்ணுவேன். எங்கப்பன் ஊர்ல இருந்தான்னு வை. ..தத்..என்னடா பொட்டை மாதிரி கிச்சன்ல பூந்துக்கிட்டே ..ஒழுங்கா படிக்கிற வழிய பாரும்பான்.எங்கம்மாவும் "யோவ் .. நீதான் கண்டுக்கிடறதில்லை. என் புள்ள எனக்கு செய்யறான் உனக்கு எங்க வலிக்குது"ன்னு கவுண்டர் விட்டதில்லை.. "சரிடா முகேஷூ.. நீ போய் படின்னு கழட்டி விட்டுருவாங்க."

"நீ என்னதான் சொல்லவர்ரே.. "

"அம்மாவுங்க கொஞ்சம் சுய நலத்தையும் வளர்த்துக்கனும். தலைக்கு குளிச்சா ஒழுங்கா தலைய துவட்டனும். டர்க்கி டவலை சுத்திக்கிட்டு பம்பரமா சுழன்றுக்கிட்டு தலைபாரம், தலை நோவு மாதிரி நோய்களை விலைக்கு வாங்க கூடாது. காலைல ஒரு காபியோட நிப்பாட்டி ஒழுங்கு மரியாதையா டிஃபன் சாப்பிடனும். வேலை வேலைனு வயித்த காய போட்டு அல்சர் வாங்கிர கூடாது. பகல் பன்னென்டு வரை காப்பிய குடிச்சு  ஷூகர் வாங்க கூடாது. உனக்கு ஒன்னு தெரியுமா .. கழிவறைக்கு போறத கூட தள்ளிப்போட்டுக்கிட்டு  நன்றி கெட்ட குடும்பத்துக்கு உழைச்சு கொட்டற அம்மாங்க இருக்காங்க. அடிக்கடி யூரின் வருதுனு தண்ணியே குடிக்காம இருக்கிற அம்மாங்க இருக்காங்க. கான்சிடிபேஷன், பைல்ஸ், பசியின்மை, பி.பி, தாளி..இப்படி ஒன்னுல்ல நூத்துக்கணக்கான நோய்களை இலவச இணைப்பா வாங்கிக்கிறாங்க. குடும்ப கவுரவுத்துக்காக பட்டுப்புடவை வாங்கற அம்மா கூட தன் ஆரோக்கியத்துக்காக கேர்ஃப்ரீ வாங்க யோசிக்கிறத நான் பார்த்திருக்கேன். சரி காலைல தான் இந்த இம்சைன்னா எல்லா பயலும் வேலை,காலேஜு, ஸ்கூலுன்னு போன பிற்பாடாவது ரிலாக்ஸ் ஆவாங்களான்னா இல்லை. காலைல பண்ண டிஃபன் மிச்சம் மீதி இருக்கும்ல அதை போட்டு வயித்த நிரப்பவேண்டியது...அட டிஸ்சார்ஜ் ஆஃப் வைட், மென்ஸ்ட்ருவல் சைக்கிள்ள ட்ரபுள், ப்ளீடிங்க் நிக்கலன்னா கூட டாக்டர் கிட்டே போற எண்ணம் கூட வராது.. குடும்பத்தை தாங்கு தாங்குன்னு தாங்கி பன்னாடைங்களை ஒரு வேலைக்கும் லாயக்கில்லாம செய்துர வேண்டியது. சோம்பேறிகளுக்கு சோறு எடுத்துட்டு போற ஜகத் சோம்பேறிகளா ஆக்கிர்ரது. ஒரு நாள் படக்குனு சொல்லாம கொள்ளாம சாகவேண்டியது.. எங்கம்மா என்னா சூப்பரா பாடுவாங்க தெரியுமா ? பொம்மை கொலு சீசன் வந்துட்டா போதும் பக்கத்து பேட்டைல இருந்தெல்லாம் மஞ்சள் குங்குமம் எடுத்துக்கிட்டு பொம்பளைங்க வந்துருவாங்க.. "சுசி.. நீ வந்து பாடினா தான் கொலுவே ஆரம்பமாகும்"னு ப்ரஷர் பண்ணுவாங்க. சாயந்திரம் 4 மணில இருந்து 9 மணி வரை டைட் ஷெட்யூல்.  "சகல கலா வா ணீயே சரணம் தாயே" "பராத்பரா பரமேஸ்வரா" இப்படி ஒரு கொலுவுல பாடினது இன்னொரு கொலுவுல பாடமாட்டாங்க.. திடீர்னு எங்கப்பனுக்கு சித்த மருத்துவத்துல இன்டரஸ்ட் வந்துருச்சு. எங்கம்மா பழைய மூலிகை இஷ்யூங்களையெல்லாம் புரட்டி எந்த நோய்க்கு எந்த மருந்துன்னு ஷார்ட் கட்ல ஒரு தொகுப்பு தயாரிச்சாங்க பாரு. அந்த பத்திரிக்கை ஆசிரியரே கும் ஆயிட்டு வரிசையா பத்து பன்னெண்டு தொகுப்பு புஸ்தவம் போட்டாரு. சரஸ்வதி மாதிரி ஒரு மனைவிய  வச்சுக்கிட்டு என்னாத்த ஹானஸ்டி. பேசாம ஆமாம் சாமி போட்டுக்கிட்டு லஞ்சத்துல பங்கு கொடுத்தா வாங்கிக்கிட்டு அவனை இவனை பிடிச்சு ட்ரான்ஸ்ஃபரை தள்ளிப்போட்டுக்கிட்டு அந்த பொம்பளைக்கு நல்லதொரு வாழ்க்கைய கொடுத்திருக்கலாம்ல..அதை செய்யல. அட! நீ ஹானஸ்டாவே இருந்து தொலை. ராமனிருக்குமிடம்தானே சீதைக்கு அயோத்தி எங்கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணானோ அதே ஊருக்கு வைஃபையும் கூட்டிட்டு போக வேண்டியதுதானே. அவள் கண்ட நாதாரிப்பயலுக்கு..பன்னாடை முண்டைகளுக்கு ஆக்கி போட்டுக்கிட்டு அவிக கிட்ட இம்சை பட்டும்  நாறனும். உனக்கு தியாகி பட்டம். அவளுக்கு? மாயா! உன்னை வீட்டோட வந்துரும்மான்னிட்டு இத்தனை அரேஞ்ச்மென்ட் பண்ணாரே எங்கப்பா அதெல்லாம் எதுக்கு தெரியுமா?"

"எதுக்கு ?"

"தன் மனைவி விஷயத்துல இருந்த கில்ட்டிய சப்ரெஸ் பண்ணிக்கத்தான்"

"ஏய் இதென்ன புது கரடி விடறே.. அப்பனும் பிள்ளையும் ரெண்டு பேருமா என்னை லவ் பண்றிங்களா என்ன ?"

" அட தத் ! பார்த்தயா நீயும் பொம்பளன்னு நிரூபிச்சிட்ட. இந்த ஆம்பள கூட்டம் இருக்கே ..சரியான ஜொள்ளு பார்ட்டிங்க. ஒரு பொண்ணு கொஞ்சம் ஹோம்லியா, கொஞ்சம் க்யூட்டா ,கொஞ்சம் ஹெல்பிங்க் நேச்சரோட, கொஞ்சமே கொஞ்சம் மதர்லி லுக்கிங்கோட இருந்தா போதும் அப்படியே சரண்டர் ஆயிருவானுங்க. அந்த பொண்ணுக்கு 4 வயசுன்னு வை கண்டவனும் இது மாதிரி ஒரு பொண்ணு எனக்கு பிறந்தா எப்படி இருக்கும்னு நினைக்க ஆரம்பிச்சுருவான்..

அந்த பொண்ணுக்கு 14 வயசுன்னு வை கண்டவனும் இது மாதிரி ஒரு பொண்ணு எனக்கு தங்கச்சியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நினைக்க ஆரம்பிச்சுருவான்..

அந்த பொண்ணுக்கு 21 வயசுன்னு வை கண்டவனும் இது மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மனைவியா இருந்தா எப்படி இருக்கும்னு நினைக்க ஆரம்பிச்சுருவான்..

அந்த பொண்ணுக்கு 32  வயசுன்னு வை கண்டவனும் இது மாதிரி ஒரு பொண்ணு வயித்துல நான்  பிறந்திருந்தா எப்படி இருக்கும்னு நினைக்க ஆரம்பிச்சுருவான்..

எங்கப்பனுக்கு 60 வயசு அவன் உன்னை பார்த்ததும் இந்த மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மகளா பிறந்திருக்ககூடாதானு நினைச்சிருப்பான். கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசிச்சு உன்னை மருமகளாக்கிக்க ஸ்கெட்ச் போட்டிருப்பான். ஒரு வேளை எங்க பெரிய அண்ணனுக்கு உன்னை கேட்கலாம்னு ஐடியா இருக்கோ என்னவோ"

"ஏய்.. ஏய் என்ன இது அம்மா ஆச்சு, அக்கா ஆச்சு, காதலி ஆச்சு, இப்ப அண்ணியா?"ன்னிட்டு மாயா சீறினா.

No comments:

Post a Comment